எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
லியோன் நகரின் ஏழாவது வட்டாரத்தில் (arrondissement) இன்று சனி மாலை 4மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேவாலயத்தை மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறிய சமயம் திருத்தந்தையை நெருங்கிவந்த நபர் ஒருவர் தன்னுடன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு தடவைகள் சுட்டார் என்று கூறப்படுகிறது. வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் திருத்தந்தை சுயநினைவிழந்துள்ளார் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.
கிறீஸ் நாட்டைச் சேர்ந்த கே. நிக்கோலா என்ற 52 வயதுடைய திருத்தந்தை உயிராபத்தான கட்டத்தில் அவ்விடத்தில் வைத்தே அவசர முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கைத்துப்பாக்கியுடன் தப்பியோடிய தாக்குதலாளியை பொலீஸார் வலைவிரித்து தேடிவருகின்றனர்.
தாக்குதல் நடைபெற்ற பகுதியை பொலீஸார் மூடியிருக்கின்றனர். அங்கு நெருக்கடியைக் கையாள்வதற்கான பிரிவு ஒன்றை உள்துறை அமைச்சு உடனேயே திறந்திருக்கிறது.
நீஸ் நகரத் தாக்குதல் நடைபெற்று ஒரிரு நாட்களில் தற்சமயம் திருத்தந்தை ஒருவர் சுடப்பட்டிருக்கிறார்.
புகழ்பெற்ற நீஸ் நகரத்தின் தேவாலயம் ஒன்றினுள் வைத்து மூவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பிரான்ஸ் முழுவதும் தாக்குதல் முன்னெச்சரிக்கை நிலைமை (urgence attentat) அறிவிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.
தேவாலயங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் ஏழாயிரம் இராணுவத்தினரை அரசு ரோந்துக் கடமையில் ஈடுபடுத்தி உள்ளது.
முக்கிய பெருநாளான அனைத்துப் புனிதர்கள் நாளை(All Saints' Day) அனுஷ்டிப்பதற்கு தயாராகும் சமயத்தில் தேவாலயத்தின் உள்ளே நடந்தேறிய படுகொலைகள் நாடெங்கும் கத்தோலிக்க மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட சமயத் தலைவர்கள் பல தரப்பில் இருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
தேவாலயத்தின் பாதுகாவலரான இரண்டு பிள்ளைகளின் தந்தை மற்றும் இரண்டு பெண்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். அவர்களில் 60 வயதான வயோதிபமாது கழுத்து அறுக்கப்பட்டதில் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். 44 வயதுடைய தாயாரான மற்றப் பெண் பிறேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது மூன்று பிள்ளைகளுடன் பிரான்ஸில் நீண்டகாலம் வசித்து வந்துள்ளார்.
காலையில் தேவாலயத்துக்கு வந்திருந்த பிறேசில் பெண்ணைத் தாக்குதலாளி கண்டபடி வெட்டியுள்ளார்.உடல் முழுவதும் காயங்களுடன் அருகே உள்ள உணவகம் ஒன்றினுள் ஓடித் தஞ்சம் அடைந்த நிலையிலேயே அங்கு அவர் பின்னர் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.
தனது பிரஜை ஒருவர் கொல்லப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கும் பிறேசில் அரசு, தேவாலயத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
புலனாய்வுத் தரப்புகளால் முன்னரே அறியப்படாத 21வயதுடைய துனீசியா(Tunisian) நாட்டு இளைஞர் ஒருவரே இந்தப் படுகொலைகளைப் புரிந்திருக்கிறார் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்திருக்கிறது.
இவர் மிக அண்மையில் கடந்த மாதமே பிரான்ஸ் வந்திருக்கிறார். முதலில் மத்தியதரைக்கடலைத் தாண்டி இத்தாலியின் லாம்பெடுசா (Lampedusa) தீவு வழியே இத்தாலிக்கும் பின்னர் அங்கிருந்து பிரான்ஸ் எல்லைக்குள்ளும் நுழைந்திருக்கிறார். அவர் வசம் இருந்த இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆவணங்கள் இதனை உறுதி செய்துள்ளன.
பிரான்ஸில் அகதிகள் புகலிடம் கோரியதற்கான எந்தப் பதிவும் இல்லாத நிலையில் நிரந்தரமான வசிப்பிடம் தெரியாத இவ்விளைஞரது பின்னணிகளை அறிந்துகொள்வது விசாரணையாளர்களுக்குப் பெரும் சவாலாகி உள்ளது.
நீஸ் தேவாலயத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.