கனடாவில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கூச்சல்! பிரதமரின் பிரசாரம் ரத்து!! (படங்கள்)

-
  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
உலகெங்கும் கட்டாய தடுப்பூசி விவகாரம் உள்நாட்டுத் தேர்தல்களில் எதிரொலிக்கின்றது. ஜேர்மனி, பிரான்ஸ் போலவே கனடாவிலும் நடைபெறவுள்ள தேர்தல்களில் அது சூட்டைக் கிளப்புகின்றது.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று தடுப்பூசி, மாஸ்க், பொது முடக்கங்கள் போன்றவற்றை எதிர்த்து வருகின்ற பலர் ஒன்று கூடிக் கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்ததை அடுத்துப் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

ரொரன்ரோக்கு வடமேற்கே போல்ரன் (Bolton) என்ற இடத்தில் வெள்ளியன்று மாலை லிபரல் தலைவர் ஜஸ்டின் ரூடோ தனது கட்சி ஆதரவாளர்கள் நூற்றுக் கணக்கானோர் முன் உரையாற்றவிருந்தார். 

அச்சமயத்திலேயே தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் அவ்விடத்தில் கூடி அவரது கொரோனாக் கட்டுப்பாட்டு நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகக்  கோஷமிட்டனர்.

கை நடுவிரல்களை உயர்த்தியவாறு சிறிய ஒலிபரப்பிகளில் நாஸிக்களது
( Nazis) சுலோகங்களையும் எழுப்பினர்.

தங்கள் குழந்தை குட்டிகளுடன் காணப்பட்ட சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ரூடோவுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பொலீஸார் அவர்களைத் தடுக்க முயன்றதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாகக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது.

தனது உரையைச் செவிமடுக்க வந்திருந்தவர்களது சுகாதாரப் பாதுகாப்புக் கருதியே கூட்டத்தை நிறுத்தியதாகப் பிரதமர் ரூடோ பின்னர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் இந்தளவு தீவிரமான கோபத்தின் வெளிப்பட்டை இதற்கு முன்னர் எப்போதும் கண்டதில்லை என்றும் அவர்
கூறியிருக்கிறார்.

"இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் உட்பட - நம் எல்லோரையுமே கொரோனா மிக மோசமாகப் பாதித்துள்ளது. மக்கள் தொகையில் ஒரு பிரிவினரின் தற்போதைய இந்த ஆத்திரத்தை நாங்கள் இரக்கத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் வைரஸ் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு தடுப்பூசி தான் ஒரே வழி என்று அறிவியல் கூறுகிறது. அந்த உண்மைக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கவேண்டிய வேளை இது "-இவ்வாறு அங்கு அவர் மேலும் தெரிவித்தார்.
 
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தனது பெரும்பான்மையை உறுதி செய்கின்ற இலக்குடன் குறித்த தவணைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தேர்தலை அறிவித்துள்ளார். செப்ரெம்பர் 20 திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்காக அரசியல் கட்சிகள் பரப்புரைகளில் 
ஈடுபட்டுள்ளன. கடந்த சில தினங்களாக ரூடோவின் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் அவருக்கு எதிர்ப்புத் தெரி விக்கும் சம்பவங்கள் சில இடம்பெற்றுள்ளன.

தொற்று நோய்க்கு மத்தியில் பொதுத் தேர்தலை அறிவித்து ஐந்து வார காலம்
பிரசாரங்களையும் நடத்த எடுத்துள்ள முடிவுக்காக எதிர்க் கட்சிகள் அவரது லிபரல் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

தீவிரமான தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில், தடுப்பூசியைக்கட்டாயமாக்கு
கின்ற திட்டங்களோடு பொதுத் தேர்தலை சந்திக்கின்ற ஜஸ்டின் ரூடோவின் உத்தி விசப் பரீட்சை போன்றது என்று சிலர்கருதுகின்றனர். 

பிரான்ஸின் மக்ரோன் அரசைப் போன்று அவரும் அரசுப் பணியாளர்களுக்கும் ரயில், விமானம், கப்பல் பயணங்களுக்கும் கனடியர்களுக்குத் தடுப்பூசியைக் கட்டாயமாக்குகின்ற திட்டங்களுடன் தேர்தலை எதிர்கொள்கிறார்.

போதிய மருத்துவக் காரணங்கள் இன்றி தடுப்பூசியைத் தவிர்ப்போருக்கு எதிராக
நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவரது கட்சி தயாராகிறது.
 
பிரதான எதிர்க்கட்சி வேட்பாளராகிய பழமைவாத கட்சியின் (Conservative) தலைவர் எரின் ஓரூல் (Erin O’Toole) தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதை "ஆபத்தான, பொறுப்பற்ற" நடவடிக்கை என்று விமர்சிக்கிறார். அரசுப் பணியாளர்களுக்கும், பயணங்களுக்கும் அன்றாட வைரஸ் பரிசோதனைகளே போதும் என்ற கொள்கையையே அவர் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் கனடா மக்கள் மத்தியில் தடுப் பூசிக்கு வரவேற்பு உள்ளது. தடுப்பூசி ஏற்றத் தகுதி உள்ளோரில் 80 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு முக்கிய கருத்துக் கணிப்பில் தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு எதிராக 78 வீதமான கனடா மக்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
Previous Post Next Post