உயிரிழந்தவர்களின் விபரம்
விபத்தில் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23), சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து யாழ். மாநகர் ஊடாக கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு இரவு 12.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேரூந்து சாரதியான சிவபாலன் சிவரூபன் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த பேரூந்தின் சாரதியான உடுப்பிட்டியை சேர்ந்த சிவரூபன் கிராமத்தின் பல்வேறு சமூக, சமய செயற்பாடுகளிலும் துடிப்புடன் முன்னின்று செயற்படுபவராவார்.
கொரோனா பேரிடர் காலத்தில் தொடர் ஊரடங்கால் பலரும் தொழிலை இழந்து வீடுகளுக்குள் முடங்கிய வேளை உடுப்பிட்டி நலன்புரிச்சங்கத்தின் உலருணவுகளை ஊர் இளைஞர்களோடு சேர்ந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியிலும் வீடு வீடாக கொண்டு சேர்த்தார். உடுப்பிட்டி நலன்புரி சங்கத்தின் முன்னாள் உறுப்பினராகவும், உபசெயலாளராகவும் செயற்பட்டவர்.
சந்நிதி முருகன் ஆலயம் மற்றும் வீரபத்திரர் ஆலய உற்சவங்களின் போது பக்தர்களுக்கான வசதிப்படுத்தல்களை செய்வதோடு ஆலயங்களின் பல்வேறு முன்னேற்றங்களிலும் முன்னின்று உழைத்தார்.
சமூக செயற்பாடுகளூடாக கிராம மக்களின் பேரன்புக்கு உரியவராவார். கடந்த வருட நெல் அறுவடையின் போது தனது நெல் அறுவடை இயந்திரம் மூலம் இரவு பகலாக கிராமத்தின் பல்வேறு இடங்களில் நியாயமான கட்டணத்தில் நெல் அறுவடை செய்து கொடுத்தார்.
இளைஞர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் கடின உழைப்பாளியுமாவார். இவரின் திடீர் மறைவு உடுப்பிட்டி வாழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.