யாழ்.பஸ் நிலையத்தில் கலாசாரச் சீரழிவுகள்! காவலரண் அமைக்கக் கோரிக்கை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெறும் சமூக விரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அப் பகுதியில் நிரந்தர பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கையில் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் காப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமராக்கள் செயலிழந்த நிலையில் நாளாந்தம் வருகை தரும் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் இடம்பெறும் சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்த பேருந்து நிலையத்திற்குள் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதேவேளை யாழ்.மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அதிக சமூகவிரோத செயல்கள் இடம்பெறுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம் மாநகருக்கு வரும் தனியார் கல்வி நிலைய மாணவ, மாணவிகள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே பேருந்து நிலையத்திற்குள் நிரந்தர பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post