ஈழத்துச் சீரடி பாபாவுக்கு மதுபானப் படையல்! யாழ்.பிரதேச செயலர் எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஈழத்து சீரடிச் சாய் பாபா ஆலயத்தில் இடம்பெற்ற மடை வைக்கும் நிகழ்வில் மதுபானங்களைப் படைத்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் எழுந்தன.

அது தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சதாசிவம் சுதர்சன் எடுத்த நடவடிக்கையின் பிரகாரம் இனி ஒரு காலமும் மதுபானங்கள் படைக்கப்படாது என்று எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியுள்ளார் ஆலய ஸ்தாபகர் பா.ராகவன்.

குறித்த ஆலயத்தில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற மடை வைக்கும் நிகழ்வில் மதுபானங்கள் படைத்தமை தொடர்பில் அகில இலங்கை சைவ மகா சபை தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

அத்துடன் இது தொடர்பில் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறுபட்ட விமர்சனங்களும், கண்டனங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இந் நிலையில் தமிழ் பண்பாடுகள், இந்து வழிபாட்டு முறைகள் என்பனவற்றுக்குப் புறம்பாகவும் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு ஏதுவாகவும் மதுபானங்கள் உள்ளிட்டவைகள் ஆலயத்தில் இருப்பதாக அறிந்தால் கடும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என கண்டிப்பான உத்தரவை எழுத்து மூலம் ஆலய நிர்வாகத்தினருக்கு யாழ்.பிரதேச செயலர் சதாசிவம் சுதர்சன்; வழங்கியுள்ளார்.



Previous Post Next Post