கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களின் கை கலப்புக் காட்சிகள்! (வீடியோ)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கிடையில் இன்றைய அமர்வின் போது கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேச சபையினால் அறவிடப்பட்டு வரும் ஆதன வரியைக் குறைக்குமாறு கோரி இன்று நடைபெற்ற விசேட அமர்வில் ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி, பின் அது கைகலப்பில் முடிவடைந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் ஆதன வரியாது பத்து வீதமாக அறவிடப்பட்டு வருகிறது. இது இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு அதிகரித்த வீதமாகும் எனத் தெரிவித்து கடந்த வாரம் கிளிநொச்சி வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரதம் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இதனையடுத்து கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக் கட்சியினை சேர்ந்த பதினொரு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களுமாக 13 உறுப்பினர்களும் ஒப்பமிட்டு விசேட சபை அமர்வினை கூட்டுமாறு கோரியிருந்தனர்.

இதனையடுத்து இன்று புதன் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு விசேட சபை அமர்வு இடம்பெற்றது. இதன்போது ஆதனவரியை பத்து வீதத்திலிருந்து நான்கு வீதமாக குறைக்குமாறு எதிர்தரப்பு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ஆதன வரி குறைப்பை குறைக்க முடியாது என விடாப்பிடியாக இருந்தனர். இந்த நிலையில் ஆதன வரியை குறைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் வாக்கெடுப்புக்கு விடுமாறு சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்க அதனை தவிசாளர் ஏற்றுக்கொள்ளவில்லை.

வாக்கெடுப்புக்கு விடமுடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்ட நிலையில் பத்து வீதமே ஆதன வரியாக அறிவிடப்படும் என்ற தீர்மானத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சபையில் இடம்பெற்ற விவாதத்தில் போது கை ஆளும் தரப்பு உறுப்பினர் ஜீவராசா மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர் ரஜனிகாந்த் ஆகியோருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆளும் தரப்பு உறுப்பினர் தனது சொந்த வாகனத்தில் சபை வளாகத்திலிருந்து வெளியேறிய பின்னர் சற்று தாமதித்து மீண்டும் சபை வளாகத்திற்கு வருகை தந்து அவசர நோயாளர் காவு வண்டியை வரவழைத்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதேவேளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த வர்த்தகரை மூன்றாம் நாள் சென்று சந்தித்த கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் எழு நாட்களுக்குள் ஏற்புடையதும், பொருத்தமானதுமான தீர்வு வழங்கப்படும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post