வாகன நெரிசலால் மூச்சுத் திணறும் ஸ்ரான்லி வீதி! களத்தில் இறங்கிய அதிகாரிகள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதிப் பகுதியில் அதிகரித்த வாகன நெரிசலால் பொதுமக்கள் போக்குவரத்துக்குக்கு இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த வாகன நெரிசலை குறைக்கும் வகையில் யாழ்.பிரதேச செயலர், மாநகர சபை ஆணையாளருடன் நேரடியாக சென்று நிலமைகளை ஆராய்ந்தனர்.

இதில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலருடன், களத்திற்குச் சென்று பிரதேச செயலர் ச.சுதர்சன் நிலமைகளை ஆராய்ந்தார். அவர்களுடன் யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரியும் வருகை தந்திருந்தார்.

அதன்போது ஸ்ரான்லி வீதியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் தமது விற்பனைப் பொருட்களை வீதியோரங்களில் காட்சிப்படுத்தி வைப்பதனால், வீதியோரங்களில் வாகனத்தை நிறுத்த முடியாமல் வீதிகளில் சாரதிகள் வாகனத்தை நிறுத்திகின்றனர். அதனால் பெரும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

வீதியோரங்களில் பொருட்களைக் காட்சிப்படுத்தும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் யாழ்.மாநகர வருமான பரிசோதகரால் அறிவுறுத்தப்பட்டு இனிவரும் காலங்களில் வீதியோரங்களில் பொருட்களைக் காட்சிப்படுத்தினால் மாநகர சபை அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வீதியில் குறியீடுகள் மற்றும் வீதியோரங்களில் வெள்ளைக் கோடுகள் வரைவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் வீதி ஒழுங்குகளையும் வாகன தரிப்பிட ஒழுங்குகளையும் போக்குவரத்துப் பொலிஸார் கண்காணிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதேவேளை மின்சார நிலைய வீதியிலும் வெள்ளைக் கோடு வரையப்பட்டு பேருந்துகளை அதற்குள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பரிந்துரைகள் வழங்கப்படும் என்று யாழ்.பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.





Previous Post Next Post