36.7 மில்லியன் மக்கள் முன் மன்னிப்புக் கேட்ட பிரான்ஸ் ஜனாதிபதி! (வீடியோ)

கொரோனாவை சமாளிக்கத் தயாராக தவறிவிட்டோம் என்று கூறி 36.7 மில்லியன் மக்கள் முன் மன்னிப்புக் கேட்டார் பிரான்ஸ் ஜனாதிபதி.

நேரலையில் தொலைக்காட்சியில் தோன்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உரையாற்றுவதை இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவில் 36.7 மில்லியன் மக்கள் பார்த்தனர்.

தவறுகள் நிகழ்ந்துவிட்டன என்று கூறிய மேக்ரான் நாம் போதுமான அளவு தயாராக இருந்தோமா என்றால் நிச்சயம் இல்லை. இவ்வளவு பெரிய ஒரு பிரச்சினையை சமாளிக்க யாரும் தயாராக இல்லை என்றார்.
தனது உரையிலேயே கொரோனா கட்டுப்பாடுகள் மே மாதம் 11ஆம் திகதி வரை நீட்டிக்கப்படும் என்பதையும் அவர் தெரிவித்தார். ஆகவே நமது முயற்சிகளையும் விதிகளையும் நாம் கண்டிப்பாக தொடரத்தான் வேண்டும் என்றார் அவர்.

எந்த அளவுக்கு விதிகள் மதிக்கப்படுகின்றனவோ அந்த அளவுக்கு உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார் அவர். அதனால்தான் கொரோனா கட்டுப்பாடுகள் மே மாதம் 11ஆம் திகதி வரை தொடரவேண்டும் என்றும் கூறினார் அவர்.

மாஸ்குகள் கிடைப்பதிலிருந்து எல்லாவற்றிலும் பிரச்சினை இருந்ததாக தெரிவித்த அவர், மருத்துவ ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை என்றார்.

ஆனால் மே மாதம் 11ஆம் திகதி வாக்கில் மருத்துவர்கள், அறிகுறிகள் கொண்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யும் நிலை உருவாகிவிடும் என்றார். தற்போது பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,967 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post