அல்லைப்பிட்டியில் பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கிய கொடூரம்! (படங்கள்)

யாழ்.தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் பசுமாடு ஒன்றைத் திருடி, இறைச்சிக்காக வெட்டிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

அல்லைப்பிட்டி 3 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கற்றாளைப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஜேசி இனப் பசு மாடே இவ்வாறு திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.

குறித்த மாட்டைத் திருடியவர்கள் அதனை அல்லைப்பிட்டி கறுப்பாச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வெளியில் வெட்டி இறைச்சியை எடுத்து விட்டு அதன் எச்சங்களை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை இவ்வாறு அல்லைப்பிட்டிப் பகுதியில் தனியார் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் திருடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தும் பொலிஸார் இது தொடர்பில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டிய மக்கள், இது தொடர்பில் உயர் அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந் நிலையில், அல்லைப்பிட்டிப் பகுதியில் வாழ்வாதாரத்துக்கு என வளர்க்கப்படும் பெறுமதி மிக்க மாடுகள் இவ்வாறு திருடப்பட்டு இறைச்சியாக்கப்படுவதால் அப் பகுதி மக்கள் மாடு வளர்க்கும் சுய தொழிலைக் கைவிடும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அந்த மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





Previous Post Next Post