டிக்டாக் மூலமாக விடியோக்களை வெளியிட்டுப் பிரபலமான திருப்பூரைச் சேர்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர் கே.செட்டிபாளையத்தை அடுத்த சபரி நகரில் வசித்து வருபவர் சுப்புலட்சுமி(34), இவர் சமூக வலைத்தளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே தனது பெயரை சூர்யா என்று மாற்றிக் கொண்டார்.
இந்தநிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பிறகு அவர் திருப்பூரில் உள்ள வீட்டுக்கு வந்ததால் அக்கம், பக்கத்தினர் அச்சமடைந்து வீரபாண்டி காவல் நிலையத்துக்கும், சுகாதாரத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலின்பேரில் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு சுப்புலட்சுமியை அழைத்துச் சென்ற காவல் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதன் பிறகு அவரது வீட்டில் தனிமைப்படுத்தி நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் வீட்டிலிருந்த சுப்புலட்சுமி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.