யாழ். இணுவில் பகுதியில் சில வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என கிடைத்த தகவலையடுத்து, இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வந்து இணுவிலில் தங்கியிருந்த ஒருவர், கடந்த 31ஆம் திகதி இந்தியாவிற்கு மீள அழைத்து செல்லப்பட்டிருந்தார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதாக செய்தி வெளியாகியது.
இது குறித்து வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனைத் தொடா்பு கொண்டு கேட்டபோது,
“புடவை வியபாரியொருவர் இணுவிலில் தங்கியிருந்தார். கடந்த 31ஆம் திகதி அவர் இந்தியா சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பதாக எமக்கு தகவல் ஒன்று வழங்கப்பட்டது. அது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
அந்த தகவலை உறுதிசெய்யுமாறு இந்தியத் தூதரகத்தை கோரியுள்ளோம். தற்போது இணுவிலில் 3 வீடுகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன“ என்றார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் இணுவிலில் இருந்து நாடு திரும்பிய இந்திய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாளை இணுவில் கிராமத்தினை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
அண்மையில் இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு கப்பல் மூலம் தமது நாட்டிற்கு அழைத்திருந்தது. அவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக இன்று மாலை தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த நபருக்கான தொற்றுத் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்கு சுகாதாரத் திணைக்களம் இந்தியத் தூதரகத்தின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
இதேவேளை அவர் தங்கியிருந்ததாக கூறப்படும் இணுவில் கிராமத்தினையோ அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளையோ தனிமைப்படுத்துவதற்கான முனைப்புக்கள் இடம்பெற்றுவருவதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தனிமைப்படுத்தல் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.