இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்கு விரைந்த தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தீயணைப்பு வாகனம் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி தோட்டத்திற்குள் பாய்ந்துள்ளது.
சம்பவத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மூவர் படுகாயமடைந்தனர். அவர்கள் மூவரும் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தீயணைப்பு படை வீரர் அரியரட்ணம் சகாயராஜா (வயது – 34) என்பவரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணம் மாநகர பதில் முதல்வர் து.ஈசன் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தார்.
முதலாம் இணைப்பு
யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம் சற்று முன் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக இவ்விபத்து நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீயணைப்பு வாகனத்தின் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் வீதியை விட்டு விலகி தோட்டத்திற்குள் பாய்ந்துள்ளது.
இச் சம்பவத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபடுபவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் வீதியோரமாக இருந்த வர் நோயாளிகள் காவு வண்டியின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.