கொரோனாவில் கொடூரத்தை மறந்த பிரான்ஸ் மக்களின் பொறுப்பற்ற செயலால் ஆபத்து! (படங்கள்)

கொரோனா வைரஸ் தாக்கத்தின் உச்சப் பாதிப்பை அடைந்திருந்த பிரான்ஸ், தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.

இருந்தும் கடந்த காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் கொடூரத்தை மக்கள் புரியாதவர்களாக, அறியாதவர்களாக, மறந்தவர்களாக நடந்து கொள்வது, மீண்டும் ஒரு மிகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆயிரக் கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த பிரான்ஸ் மக்கள், இவ்வாறு நடந்து கொள்வது எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தைச் சந்திக்க வேண்டி வரும் என்பது சுகாதாரத்துறையின் எச்சரிக்கையாகவுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முழுமையாக முடக்கப்பட்டிருந்த பிரான்ஸ், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி கடுமையான முடக்கத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியேறத் தொடங்கியது.

இந் நிலையில் தற்போது அருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் நீச்சல் தடாகங்கள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்விடங்களில் மக்கள் எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாது ஒன்று கூடி வருகின்றமை எதிர்காலத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சம் பெறும் என்பதை ஊகித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

எவ்வாறானயினும் அங்கு கூடி நிற்கும் மக்களின் முகங்களிலும் மனங்களிலும் ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி, உத்வேகம், விடுதலை, சுதந்திரம் போன்ற உணர்வுகள் தென்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறான மகிழ்ச்சிகள் உண்மையில் நிரந்தரமாக இருக்க வேண்டுமே தவிர, தற்காலிகமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கக் கூடாது. எனவே சமூக இடைவெளியுடன் கூடிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாக அமையும்.




Previous Post Next Post