“முடிவை மாற்றி விட்டேன்” சுமந்திரனை விமர்சித்து சிறிதரன் அறிக்கை! அது நான் இல்லை என மறுப்பு!!

என்னை ஜெனீவாவுக்கு சென்று உரையாற்றும்படி கூறிவிட்டு எனக்கு முன்னமே அங்கு சென்று இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக எமது கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரே ஆதரவளித்து வந்திருந்தமை குறிப்பிட்டுக் காட்டவேண்டியதொன்று என்று தெரிவித்து தனது வெற்றி இலக்கத்துக்கு மட்டும் வாக்களியுங்கள் எனக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவருடைய பெயரில் sritharanmedia2020@gmail.com என்ற மின் அஞ்சல் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன்


அன்பான ஆதரவாளர்களே,

யாழ்ப்பாணம் கிளிநொச்சி வாக்காளர்களே,

தமிழ்த் தேசியத்தின் பால் நான் கொண்டுள்ள ஈர்ப்பும் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனின் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றும் அந்தப் போராட்டத்தில் தம்மை இணைத்து விதையாகிப் போன மாவீரர்களது தியாகத்தின் மீது நான் கொண்டுள்ள மரியாதையும் காரணமாகவே சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையால் அல்லல்படும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென எண்ணி கல்வித் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தேன். இது என்னை அறிந்த அனைவருக்கும் தெரிந்த உண்மை.

அதனாலேயே 2010 2015 தேர்தல்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தமிழ் மக்கள் எனக்கு அமோகமாக வாக்களித்து என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள். எந்த எதிர்பார்ப்புடன் என்னை பாராளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பிவைத்தார்களோ அவர்களுடை குரலாக பாராளுமன்றில் நான் செயற்பட்டேன் என்பது உங்களுக்கு தெரிந்த விடயம்.


ஆனால் 2020 பாராளுமன்றத் தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. தமிழர் தரப்பாம் எம்மிலேயே பல பிரிவுகளாக பிரிந்து நின்று நாம் போட்டி போடுகின்றோம். தமிழ் மக்களின் ஒரேயொரு ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை அதனுடைய வாக்கு பலத்தினை சிதறடிக்க வேண்டுமென்ற ராஜபக்‌ஷக்களது நிகழ்ச்சி நிரலில் சிக்குண்டுள்ள எமது தமிழ்த் தரப்புக்கள் சில இம்முறை தேர்தலில் அதிகளவான நிதிகளை செலவு செய்து வாக்குக் கேட்கின்றார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று எம்மிடம் கேட்கின்றார்கள். மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் தமது இலாபங்களை அடைந்துகொள்ள முயல்கின்றார்கள். இதில் எமது கூட்டணியில் கட்சியில் இருந்த சிலரும் பிரிந்து போய் புதிய கட்சிகளை உருவாக்கி கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


எமது கூட்டமைப்புக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கின்றன அதற்கு காரணங்களும் இருக்கின்றன. எமது கூட்டமைப்பில் கட்சியில் உள்ளா சிலரின் எழுந்தமானமான நடவடிக்கைகள் காரணமாகவே தற்போதைய இந்த நிலை கூட்டமைப்புக்குள் எழுந்துள்ளது என்பதை ஆணித்தரமாக இங்கே குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.

நாம் 2015 இல் கூறிய பல விடயங்களை எமக்கு செய்யமுடியாமல் போயுள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். அதில் இலங்கை பௌத்த பேரினவாத அரசாங்கத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் காப்பாற்றியதற்கு கூட்டமைப்பின் ஒரு சில நடவடிக்கைகளே காரணம். இலங்கை பாராளுமன்றில் எமக்கிருந்த பலத்தினை பேரம்பேசும் சக்தியினை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்றுவதற்கே நாம் பயன்படுத்தினோம். குறைந்தபட்சம் எமது 10 கோரிக்கைகளில் ஒன்றான கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்த்லைக்கூட செய்து தருவதற்குக் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் முடியாமல் போயிருந்தது.


நாம் நன்றாக ஏமாற்றப்பட்டோம் என்பது உண்மை.

என்னை ஜெனீவாவுக்கு சென்று உரையாற்றும்படி கூறிவிட்டு எனக்கு முன்னமே அங்கு சென்று இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக எமது கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரே ஆதரவளித்து வந்திருந்தமை குறிப்பிட்டுக் காட்டவேண்டியதொன்று. இவ்வாறு எம்மால் செய்யமுடியாமல் போன விடயங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் தற்போதைய தேர்தல் இறுதிக் காலப்பகுதியில்நாம் நின்று கொண்டிருக்கிறேம்.

ராஜபக்‌ஷக்களின் எழுச்சிக்கு எதிராக வட கிழக்கில் ஓரணியாக எழுந்து நிற்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஆகையினால் தமிழ்த் தேசியத்தின் பாதையில் எந்தவித விட்டுக் கொடுப்புக்களுமின்றி உறுதியாக பயணம் செய்பவர்களை தெரிவு செய்யுங்கள்.

சிவஞானம் சிறீதரன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
வேட்பாளர் - பாராளுமன்றத் தேர்தல் 2020
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
0776913244

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு மட்டும் வாக்களிக்குமாறு கோரி ஊடகங்களுக்கு தனது பெயரில் அனுப்பப்பட்ட மின் அஞ்சல் போலியானது என யாழ்.மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை sritharanmedia2020@gmail.com என்ற முகவரியிலிருந்து ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் “முடிவை மாற்றிவிட்டேன்“ எனத் தலைப்பிடப்பட்டு வேட்பாளர் சுமந்திரனை விமர்சித்து அறிக்கை அமைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் குறித்த அறிகை தொடர்பில் சிறீதரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

sritharanmedia2020@gmail.com என்ற மின் அஞ்சலா எனக் கேட்டு உறுதிப்படுத்திய சிறீதரன், தனக்கு அவ்வாறான அறிக்கை இப்போது விடவேண்டிய தேவையில்லை என்றும் அது தன்னுடையது இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இது குறித்து தான் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். போலி மின்னஞ்சல் குறித்து அவர் ஊடகங்களுக்கு எச்சரித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post