எல்லையில்லாக் கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் திருவெண்காட்டில் திருவிழா! (சிறப்பு மலர்)


உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சித்தி விநாயகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியக்ஷத்திரம் திருவெண்காடு சித்தி விநாயகர் திருக்கோயில்.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான
கொடியேற்ற நாள் 24.08.2020 ஆகும்.

வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரத்துடன் அமைந்திருக்கின்ற இந்த சித்திவிநாயகப்பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புனித ஸ்தலமாகும்.

இந்த எல்லையில்லாக் கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் திருவெண்காட்டு பதி சித்திவிநாயகனுக்கு சார்வரி வருட மஹோற்சவம் (24.08.2020) திங்கட்கிழமை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

கருணையே வடிவான சித்திவிநாயகப்பெருமான் அலங்காரமாக நடுநாயகமாக வர ஒருபக்கம் அன்பு தம்பி பாலமுருகனும் மற்றப் பக்கம் தாய் தந்தையான அம்மை அப்பனுடன் அழகாக வரும் அற்புதமான அருட் காட்சி பக்தி பூர்வமானது.

“எந்நாளும் திருவெண்காட்டை வலம் வந்து வணங்கினால் இடர்களெல்லாம் போமே” என்றபடி திருவெண்காட்டிலே வருடாந்த மஹோற்சவ காலத்தில் சித்திவிநாயகனை வணங்குவதற்காக அடியார்கள் கூட்டம் அலைமோதும் பக்தி நிறைந்த காட்சி அருள்மயமானது.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனாகிய சித்திவிநாயகப்பெருமான் விரும்பியுறையும் இடம் இந்த திருவெண்காட்டு பதியாகும். இன்று முதல் பத்து நாள்கள் நடைபெறுகின்ற இம்மஹோற்சவத்திலே ஒவ்வாரு நாளும் விதவிதமான அலங்காரத்துடன் வெவ்வேறு அழகிய வாகனங்களில் சித்திவிநாயகப்பெருமான் திருவீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

இன்னகாரியம் எனக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பக்திபூர்வமாக நேர்த்தி வைத்து உள்ளன்போடு வணங்கினால் அந்தக் காரியம் எவ்வித தடங்கலுமின்றி நிச்சயமாக நிறைவேறிவிடும் சித்திவிநாயகப்பெருமானைக் கைதொழுதால் எந்தக் காரியமும் நிறைவேறும் என்ற பரிபூரணமான நம்பிக்கையே காரணமாகும்.

தொல்லை வினை தீர்த்து வைக்கும் சித்திவிநாயகனின் கருணைக்கு நிகரே இல்லை. நம்பியோரை ஒருபோதும் கைவிட மாட்டான் திருவெண்காட்டான்

“பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் சித்திவிநாயகன் தஞ்சமடி” என்ற வரிகளில் எவ்வளவு உண்மை பொதிந்திருக்கிறது பார்த்தீர்களா?

திருவெண்காட்டிலே தினமும் சித்திவிநாயகப்பெருமான் வீதியுலா வரும் அழகுக் காட்சி வர்ணிக்க முடியாதது. நேரில் வந்து பார்த்தால்தான் அந்த அழகின் தாற்பரியம் புரியும். அவ்வளவு கொள்ளை அழகு சித்திவிநாயகனின் திருவிழாக் காட்சிகள்.

ஐந்தாம் நாள் திருவிழா வெள்ளையானை (ஐராவதம்) முதலாக சப்பறம், வேட்டை , தேர், தீர்த்தம் என்று ஒவ்வொரு விழாவும் அற்புதமானவை.

இந்தத் திருவிழாக்களைப் பார்ப்பதற்காக நாட்டின் நாலாபக்கங்களிலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் திருவெண்காட்டை நோக்கி அடியார்கூட்டம் படையெடுத்து வரும். திருவெண்காடுபதியே விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

“திருவெண்காட்டானுக்கு அரோஹரா! சித்திவிநாயகனுக்கு அரோஹரா! என்று வாய் உரக்கச் சொல்லிய வண்ணம் அடியார் கூட்டம் அங்கப் பிரதட்சணம் செய்தும் பெண் அடியார்கள் விழுந்து விழுந்து கும்பிட்ட வண்ணம் அடியளிக்கும் நிகழ்வும் பக்திபூர்வமானதே.

வேட்டை, சப்பறம், தேர், தீர்த்தம் இம் நான்கு திருவிழா நாள்களுமே அடியார் கூட்டம் அலைமோதும் நாள்களாகும். தினமும் முன்னே மங்கள தவில் நாதஸ்வர இசை முழங்க. அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்துவர. பஜனைக் கோஷ்டிகள் சித்திவிநாயகன் புகழ் பாடி வர இடம்பெறும் இனிய நல் விழாப் பொலிவு வர்ணனையில் எழுத்தில் அடங்காது.

மண்டைதீவு இலங்கைநாயக முதலியார் வம்சத்தவர்களால் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் வாசலில் வானுயர்ந்த ஒரு அழகிய இராஜகோபுரமும் மணிக்கோபுரமும் அணிசெய்கின்றன. தெற்கு வாசலில் ஆனந்த நடராஐ மூர்த்தியும் சிவகாமி அம்பாளும் அருள்பாலித்துக்கொண்டிருப்பது திருவெண்காட்டு பதிக்கு இன்னுமொரு சிறப்பாகும்.

சித்திவிநாயகப் பெருமானுடைய பேரருட் கருணையைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த ஆலயத்தில் மூன்று காலப் பூசை நிகழ்த்தப்படுகின்றது.

இப்படியான சித்திவிநாயகப் பெருமானின் திருவிழாப் பவனி காண்பது கிடைத்தற்கரிய பேறாகும்.

எம் பெருமானின் திருவிழா காண சித்திவிநாயகப் பெருமான் அடியார்கள் திரண்டு வருகின்றனர். சித்திகளை அள்ளித்தரும் சித்திவிநாயகனின் அருள்பெற்று வாழ அவனருளையே நாடி நிற்போமா!

மகோற்சவகாலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் எமது தளம் மற்றும் முகநுால் ஊடாக கண்டு சித்திவிநாயகப்பெருமானது அருளினை வேண்டிநிற்கலாம்.

சுபம்

இறைபணியில்
பொ.வி.திருநாவுக்கரசு குடும்பம்
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
ஆலய தர்மகர்த்தாக்கள்
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் -
யாழ்ப்பாணம் , இலங்கை.
Previous Post Next Post