வடக்கு முதல்வர் வேட்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி? (படங்கள்)

நீண்டகாலமாக அரசியலில் ஈடுபடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி சந்திரகுமார் தலைமையிலான அணியில் இணைந்து எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அரசியல் மற்றும் மருத்துவத் துறை மட்டங்களில் பேச்சப்பட்டு வந்த நிலையில் அதனை உறுதிப்படுத்துவதான சம்பவம் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிப்பரப்புரைக் கூட்டங்களில் கட்சிகள் அனைத்தும் நேற்றைய நாள் தங்கள் பலத்தைக் காண்பிப்பதற்கு கடும் முயற்சி மேற்கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சியில் கேடயம் சின்னத்தில் போட்டியிடுகின்ற சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தினை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் மூத்த சகோதரான பொறியியலாளர் தங்கமுத்து சண்முகம், இளைய சகோதரரான தங்கமுத்து கோணேஸ்வரன் ஆகியோர் முதன்மைச் சுடர் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.


இதேவேளை அண்மையில் மருத்துவர் சத்தியமூர்த்தியின் இளைய சகோதரான வைத்திய கலாநிதி தங்கமுத்து கோணேஸ்வரன் வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து அவருடைய முகநூலில் தன்னுடைய கருத்து ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

அதில்,

”தனிமனித எதேட்சையான போக்கு நிலையில் இருந்து கிளிநொச்சி மக்களை மீட்டு அவர்களின் அடிப்படை விடயங்களான கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழிலின்மை பிரச்சினைகளை வீழ்ச்சி நிலையிலிருந்து உயர்த்திச் சென்றிட அனுபவம் மற்றும் மண்ணை நேசிக்கும் அனைவரினதும் வேண்டுதலும் எதிர்பார்ப்புமாகும் யாரும் வந்து கத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ளட்டும். ஆனால் கிளிநொச்சியை வளமாக்கிட கல்விச் சமூகம் உங்களை எதிர்பார்க்கிறது. வாழ்த்துக்கள் உங்கள் வெற்றிக்கு”


இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மாகாணசபைத் தேர்தலில் சந்திரகுமார் தலைமையிலான அணியில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படும் சூழலில் அவருக்கு பதிலாக அவருடைய சகோதரர்கள் பங்கேற்றிருப்பதாக அவதானிக்க முடிகிறது என்கின்றனர் நோக்கர்கள்.

இதேவேளை அண்மையில் சந்திரகுமாரை ஆதரித்து கிளிநொச்சியின் மூத்த அதிகாரிகள் பங்குகொண்ட கூட்டத்தில் சத்தியமூர்த்தியும் பங்குகொண்டிருந்தார் என்று சந்திரகுமார் ஆதரவு மேடை ஒன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கும் சத்தியமூர்த்தி மறுப்புத் தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post