எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மருத்துவமனைகளிலும் அவசர பிரிவுகளிலும் இதுவரைக்கும் அதிக தாக்கம் உணரப்படாமல் இருப்பதை வைத்துக்கொண்டு பாதுகாப்பு குறித்து தவறான மதிப்பீடு செய்துவிட முடியாது. அது ஒரு பெரும் வெடிப்பாக திடீர் என அதிகரிக்கக் கூடும்- என்று அறிவியல் குழுவின் தலைவர் Jean-Francois Delfraissy தெரிவித்திருக்கிறார்.
நாளை வெள்ளிக்கிழமை அதிபர் மக்ரோன் தலைமையில் நடைபெறவிருக்கும் பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் நாட்டின் சுகாதார நிலைமை தொடர்பான முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சு கடைசியாக வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி 24 மணிநேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 577 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக 71 தொற்றுக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 386 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரை உள்ளடக்கிய Ile-de-France மற்றும் Auvergne-Rhône-Alpes, Occitanie, Provence-Alpes-Côte d'Azur ஆகிய பிரதேசங்களில் தொற்றுக்கள் அதிகம் பதிவாகி உள்ளன. இங்குள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக் கட்டில்களில் அனுமதிக்கப்படுவோர் தொகையும் உயர்ந்துவருகிறது.
முகக் கவசம், சமூக இடைவெளி என்பனவற்றை இறுக்கமாகப் பேணுவதுடன் தனிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று கூடுவதை இயன்றளவு தவிர்க்குமாறும் பொது மக்களை சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
இதேவேளை வைரஸ் தொற்றிய ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாட்டின் பிரதமர் ஏழு நாள்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்துவருகிறார். அரசு மட்ட சந்திப்புகள் அனைத்தும் வீடியோ வழியாக நடத்தப்பட்டு வருகின்றன.