எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இந்த விடயம் தொடர்பில் பொது மகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வலி. தெற்கு பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தவராஜா துவாரகன், இன்று உப அலுவலகத்துக்குச் சென்று நேரில் ஆராய்ந்துள்ளார். அதன்போது உத்தியோகத்தர்கள் இருவர் மட்டுமே கடமையில் இருந்த நிலையில் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
இதுதொடர்பில் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன் தெரிவித்ததாவது;
வலி. தெற்கு பிரதேச சபையின் ஏழாலை உப அலுவலகத்தில் வியாபார அனுமதி பத்திரம் ஒன்றிற்கு பணம் செலுத்துவதற்காக நீண்ட நாள்களாக பணம் செலுத்த சென்ற போதும் உத்தியோகத்தர்கள் இல்லை என திருப்பி அனுப்பப்பட்ட ஒருவர் என்னிடம் முறையிட்டார்.
அவரது ஆவணங்களுடனும் அவரையும் அழைத்துக் கொண்டு நான் இன்று முற்பகல் 10 மணிக்கு உப அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு வேறு சிலரும் பணம் செலுத்தக் காத்திருந்தனர். பொறுப்பதிகாரி உள்ளிட்ட 14 உத்தியோகத்தர்கள் உப அலுவலகத்தில் கடமையாற்றுகின்றனர். எனினும் நான் சென்ற போது, அலுவலகத்தில் இருவர் மட்டுமே கடமையில் இருந்தனர்.
அதன் போது என்னை வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் என அறிமுகப்படுத்தாமல் அங்கிருந்த உத்தியோகத்தர் ஒருவரிடம் பணம் செலுத்த வந்துள்ளேன் என்று குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் வழமை போல் பணம் பெறுவதற்கு உத்தியோகத்தர் இல்லை மாலை 3 மணி போல் வந்து பார்க்குமாறு கூறினார்.
ஏனைய உத்தியோகத்தர்கள் எங்கு சென்றுவிட்டேன் என்று கேட்டேன். அவர்கள் விருந்துபசார நிகழ்விற்கு சென்றுவிட்டார்கள் என உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.
எனவே ஏழாலை உப அலுவலகத்தில் கடமையாற்றும் இவ்வாறான உத்தியோகத்தர்களால் சபையின் வருமான இழப்பு இடம்பெறுகின்றது. பொதுமக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். கடமை நேரம் உத்தியோகத்தர்கள் இல்லை. மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் உத்தியோகத்தர்கள் ஏன் மக்களை இவ்வாறு அலைய விட வேண்டும்? எனவே இவ் விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற் கொள்ளப்படும் – என்றார்.