எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அந்த இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, கைகள் பின்னால் விலங்கிடப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளான்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
தெற்கு லண்டனின் குரோய்டோனில் உள்ள காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் அதிகாரிகளும் துணை மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர்
அந்த இளைஞன் தனது கால்சட்டைக்குள் சிறிய ரிவோல்வரை மறைத்து வைத்திருந்துள்ளான். கைவிலங்கிடப்பட்ட நிலையிலும், ரிவால்வரை எடுத்து சூடு நடத்தியுள்ளான். சிறிய துப்பாக்கியை நன்கு மறைத்து வைத்திருந்ததால், அவனை கைது செய்தபோது, அதிகாரிகள் துப்பாக்கியை கண்டுபிடிக்க தவறிவிட்டனர்.
நோர்பரியின் ஆண்டர்சன் ஹைட்ஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் பொலிசார் நடத்திய சோதனையில் இளைஞன் கைது செய்யப்பட்டான். அங்கிருந்து பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்ட போதே துப்பாக்கிச்சூடு நடந்தது.
.
இலங்கையை சேர்ந்த கத்தோலிக்கரான சன்ன டி சொய்ஸா மற்றும் பிரித்தானியரான எலிசபெத் தம்பதியினருக்கு சொந்தமான வீட்டிலேயே சோதனை நடந்தது. எலிசபெத் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார். ஜோன், லூயிஸ் என்ற இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்கள். அந்த வீடு தொடர்ந்து பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
23 வயதான லூயிஸ் என்பவனே துப்பாக்கிச்சூடு நடத்தினான். அந்த வீடு மற்றும் அயல் பிரதேசங்களில் பொலிசார் பெரியளவிலான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டனின் நோர்பரியிலுள்ள வீடு, மற்றும் சர்ரேயில் பான்ஸ்டெட், பார்க் வீதியில் உள்ள இன்னொரு வீடு ஆகியன இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சோதனையில் உள்ளன.
சன்ன டி சொய்ஸா- எலிசபெத் தம்பதியினரை பொலிசார் தேடி வருகின்றனர்.
நியூசிலாந்து பின்னணியுடைய மட்ரியு ரத்தனா (54) என்ற பொலிஸ் சார்ஜன்டே உயிரிழந்தார். அவரது மார்பில் 5 தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.
வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே லூயிஸ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பொலிஸ் நிலையத்தில் மெட்டல் டிடெக்டருடன் அவரை சோதனையிட முயன்றபோதே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ரத்தனா ஈஸ்ட் கிரின்ஸ்டெட் ரக்பி கிளப்பில் பயிற்சியாளராகவும் இருந்தார்.
அதிகாரியை சுட்டபின்னர், துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டதில் லூயிஸின் கழுத்தில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இது பயங்கரவாத சம்பவமாக இருக்கலாமென பொலசார் சந்தேகிக்கின்றனர்.