பிரான்ஸில் நடைமுறைக்கு வரும் ஊரடங்கின் விபரங்கள்! பிரதமர் வெளியிட்ட முழுத் தகவல்கள்!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாரிஸ் உட்பட பெரு நகரங்களில் நடைமுறைக்கு வருகின்ற சுகாதார ஊரடங்குச் சட்ட விதிகளின் கீழ் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் அடங்கலாக பொதுமக்கள் சேவைக்குத் திறந்திருக்கின்ற எல்லா நிலையங்களும் இரவு 9 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது.

சமைத்த உணவு வகைகளை வாடிக்கையாளர்களது இருப்பிடங்களுக்கு விநியோகிக்கும் உணவகங்கள் தவிர்ந்த ஏனைய எல்லா உணவகங்களும் இதற்குள் அடங்கும். 

"இரவு ஒன்பது மணியானதும் மக்கள் அனைவரும் வீடுகளில் தங்கிவிடவேண்டும்" என்று நாட்டின் பிரதமர் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் இரவு வழமை போன்று நடைபெறும்.

ஊரடங்கு சமயத்தில் நடமாடுவதற்கான அனுமதிப்பத்திரம் (attestation de déplacement) உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது. 

முன்னர் பொது முடக்க காலப்பகுதியில் நடைமுறையில் இருந்ததைப் போன்றே அப் படிவத்தை அச்சுப் பிரதி எடுத்தும் கைத்தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்த முடியும்.

தொழில் நிமித்தம் ஊரடங்கு நேரத்தில் நடமாடுவோர் தொழில் அடையாள அட்டைகளுக்கு மேலதிகமாக இந்தப் படிவத்தையும் பூரணப்படுத்தி வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.

12 ஆயிரம் பொலீஸார் ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.தகுந்த காரணம் இன்றி ஊரடங்கை மீறுவோரிடம் 135 ஈரோக்கள் அபராதம் அறவிடப்படும். ஒருவர் மூன்று தடவைகள் மீறினால் ஆறுமாதகால சிறையுடன் 3ஆயிரத்து 750 ஈரோக்கள் அபராதம் செலுத்த நேரிடலாம். 

பின்வரும் காரணங்களுக்காக ஊரடங்கு நேரத்தில் நடமாட விலக்களிக்கப்படும்.

நோய் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மருத்துவரிடம் அல்லது மருத்துவமனைக்கு அல்லது மருந்தகத்துக்கு செல்வதற்கு. (pour des raisons de santé se rendre chez le médecin, à l'hôpital, à la pharmacie de garde)

இரவு 9முதல் காலை 6மணி வரையான காலப்பகுதிக்குள் இரவுத் தொழில் நிமித்தம் நடமாடுவோர். (pour des motifs professionnels comme le travail de nuit)

இரவு 9 மணிக்குப் பின்னர் விமானம் மற்றும் ரயில் பயணங்களுக்குச் செல்ல அல்லது பயணங்களால் வீடு திரும்புவதற்கு விலக்கு உண்டு. ஆனால் பயண ரிக்கெற் அத்தாட்சி அவசியம். (pour prendre un train ou un avion qui part ou arrive après 21 heures. "Il faudra pouvoir, le cas échéant montrer un billet")

பிறரில் தங்கி வாழும் ஒருவரை பார்ப்பதற்கு அல்லது பராமரிப்பதற்குச் செல்ல அனுமதி உண்டு. ( voir un proche en situation de dépendance)

நாய்கள் போன்ற வளர்ப்புப் பிராணிகளை வீட்டுக்கு அருகே கொண்டு செல்வதற்காக நடமாட அனுமதி (sortir son animal de compagnie à proximité du domicile) .

இதேவேளை, நாடு முழுவதும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்ற சுகாதார அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளை பொது மண்டபங்களில் நடத்துவது முற்றாகத் தடை செய்யப்படுகிறது. 

மாணவர்கள், இளையோர் ஒன்று கூடி நடத்துகின்ற களியாட்டங்கள், விருந்துபசாரங்களும் தடைசெய்யப்படும்.

பிரதமர் Jean castex இத்தகவல்களை இன்று வெளியிட்டார்.

நன்றி:
குமாரதாஸன்,
பாரிஸ்.
Previous Post Next Post