எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் பெருமாள் கோவிலடியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளான தனுரொக் என்பவரின் நண்பன் மீதே இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
3 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 6 பேர் கும்பல் வீடு புகுந்து பொருள்களுக்கு தீவைத்தும் அடித்துச் சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன், தாய் மற்றும் மகன் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், சந்தேக நபர் ஒருவரை நேற்றுக் கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தினர்.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை கோரி விண்ணப்பம் செய்தார். அத்தோடு சந்தேக நபருக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்றும் சான்றாதாரங்களை முன்வைத்தார். பிணை வழங்க பொலிஸார் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த பதில் நீதிவான், சந்தேக நபரை வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, தனுரொக் மீது தாக்குதல் நடத்திய ஓட்டுமடம் சுமன் தலைமையிலான கும்பலே இந்தத் தாக்குதலையும் முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.