மண்டைதீவு விவசாயிகளை ஏமாற்றிய கமநல சேவைகள் திணைக்களம்! விவசாயி ஒருவரின் ஆதங்கம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மண்டைதீவுப் பகுதியில் வாழ்கின்ற பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் விவசாயம். கடந்த காலங்களில்; அதிகளவானவர்கள் நெற்செய்கையில் ஈடுபட்டதுண்டு.

ஆனால் தற்போது மண்டைதீவுப் பகுதியில் உள்ள கால்நடைகள் விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதால் நெற்செய்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.

இந் நிலையில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகளின் வாக்குறிதிகளை நம்பி இம்முறை நெற்செய்கை செய்த விவசாயிகள் கால்நடைகளால் பாதிப்படைந்து பாரிய நஷ்டத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

வளர்ப்பு கால்நடைகள் மற்றும் கட்டாக்காலி கால்நடைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தித் தருவதாகத் தெரிவித்தே நெற்செய்கைளை அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளனர்.

இருந்தும் அதை நடைமுறைப்படுத்தாததால் நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது,

வானம் பார்த்த பூமி. காலம் அளந்து காடாய், மேடாய் கிடந்த வயல் நிலம் அத்தனையும் தூர்ந்த வரம்புகளை மீள உயர்த்தி உழவு செய்து நெல்லை விதைத்து இன்று பயிராய் காட்சி தரும் நிலையில், வளர்ப்பு ஆடுகளும், மாடுகளும் ஒரு பக்கம். கட்டாக்காலி மாடுகள் மறுபக்கம்.

உய்வதற்கு வேறு வழியில்லை. கடன்பட்டு, வீட்டில் இருந்த நகைகள் எல்லாவற்றையும் அடைவு வைத்து செய்த தொழில் மாட்டாலும், ஆட்டாலும் அழிந்து போகின்றது. கண்டுகொள்ளாத கமநல சேவைகள் திணைக்களம் யாவும் சாவைத் தழுவி விட்டனவா? வேலணை பிரதேச செயலகம் ஏன் பின்னடிக்கின்றது?

ஆரம்பத்தில் நெல்லைப் பயிரிடவில்லையாயின் பயிரிடப்படாத நிலங்களை, நிலம் அற்றோருக்கு எடுத்துக் கொடுக்கப்படும் என்ற வெருட்டோடு தொடங்கப்பட்ட ஊக்கம், யார் காணிகளையும் யாரும் விதைக்கலாம் என்ற சரத்தோடு விடுக்கப்பட்ட எழுச்சி தற்போது ஆக்கம் இல்லா அழிவுக்கு வித்திட்டதுவோ? என எண்ணத் தோன்றுகின்றது.

“வரும்முன் காவாதான் வாழ்க்கை
எரிமுன் வைத்தூறு போலக் கெடும்”

எனவே அழிவுக்குக் காரணமாய் இருக்கின்ற இக் கால்நடைகளைக் கட்டுப்படுத்தி நன்மை விளைய வழி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆகவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து விவசாய செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் கால்நடைகளைக் கட்டுப்படுத்துமாறு அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post