பிரான்ஸில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிபர் மக்ரோன் விடுத்த வேண்டுகோள்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • பரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் 
பிரான்ஸில் வைரஸின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகவலைத்தளப் பாவனையாளர்களது உதவியைக் கோரியிருக்கின்றார் அதிபர் மக்ரோன்.

ஆறு மில்லியன் பயனாளர்களைக் கொண்ட தனது ருவீற்றர் தளத்தில் அவர் இந்தக் கோரிக்கையைப் பதிவிட்டிருக்கின்றார். 

"இந்தச் செய்தியை வசிப்பவர்கள் வைரஸ் தொடர்பாக ஏதாவது விழிப்புணர்வைச் செய்ய முன்வரவேண்டும். ஐம்பது, நூறு, அல்லது ஒரு மில்லியன் என்ற கணக்கில் பயனாளர்களைக் கொண்ட உங்களது சமூகவலைத்தளங்களால் உயிர்களைக் காப்பாற்ற முடியும். உங்கள் குரல்ப் பதிவுகள், காணொலிகள் பல உயிர்களைப் பாதுகாக்கக்கூடியவை. வைரஸின் இந்த இரண்டாவது அலையை நாம் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்கொள்வதற்குரிய பொறுப்புணர்வைக் கோருவதற்கு உங்களது சமூகவலைத்தளப் பதிவுகள் எங்களுக்கு உதவும்..."
-இவ்வாறு மக்ரோன் தனது ருவீற்றர் செய்தியில் பகிரங்க அழைப்பைப் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை வைரஸ் தொற்றுத் தொடர்பாக இளவயதினருக்கு விழிப்பூட்டும் நோக்கில் சமூகவலைத்தளப் பிரபலங்களின் உதவியை அரசு நாடியிருக்கிறது.

பிரான்ஸில் யுரியூப்(YouTube) மற்றும் Tweeters, Instagram போன்ற சமூக வலைப்பின்னல்கள் ஊடாக மில்லியன் கணக்கில் இளவயதினரைக் கொள்ளை கொண்ட இளம் நட்சத்திரங்கள் (stars des réseaux sociaux) கொரோனா வைரஸ் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக எலிஸே மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக Léna Situations, EnjoyPhoenix, Paola Locatelli மற்றும் Just Riadh ஆகிய நான்கு இளம் சமூகவலைத்தளப் பிரபலங்களை அரசு கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது.

கொரோனா வைரஸ் இளவயதினர் மத்தியில் மிக வேகமாகத் தொற்றி வருவதால் மோசமான சுகாதார நெருக்கடி குறித்து இளைஞர்களுக்குத் தெரியப்படுத்த அரசு முயற்சிக்கின்றது.

இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை வெளியான சுகாதார அறிக்கையின்படி கடந்த 24 மணிநேரத்தில் 52 ஆயிரம் பேர் புதிதாகத் தொற்றுக்கு இலக்காகி உள்ளமை தெரியவந்துள்ளது.

(படம் :சமூகவலைத் தளங்களில் பல மில்லியன் பயனாளர்களைக் கவர்ந்த பிரான்ஸின் இளம் நட்சத்திரங்களான Léna Situations, EnjoyPhoenix.)
Previous Post Next Post