தமிழ் மக்களை பொறுத்தவரை திலீபன் தியாகி: கெஹலிய முன் யாழ். ஊடகவியலாளர் தெரிவிப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
"தியாகி திலீபன் உங்களுக்கு வேண்டுமானால் பயங்கரவாதியாக இருக்கலாம். ஆனால், எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு அவர் தியாகி. தமிழ் மக்களுக்காகவே அவர் போராடி உயிர் நீத்தார் எனக் கருதுகின்றார்கள்."

- இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு முகத்தில் அறைந்தால் போல் நேரில் தெரிவித்தார் யாழ். ஊடகவியலாளர் ஒருவர்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தப் பரபரப்புச் சம்பவம் நடந்தது.

இதன்போது, செய்தியாளர் ஒருவர் தியாகி திலீபன் நினைவேந்தல் தடை குறித்து கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த கெஹலிய எகத்தாளமாகப் பதிலளித்தார்.

"திலீபன் ஒரு பயங்கரவாதி. அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது. பின்லேடனை நினைவுகூர அமெரிக்கா அனுமதிக்கின்றதா? இல்லையே. அது போல்த்தான் திலீபனும் ஒரு பயங்கரவாதி. அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது. இன்று திலீபனை நினைவுகூரக் கேட்பார்கள். நாளைக்கு 'எக்ஸ்'ஐ நினைவுகூர, 'வை'யை நினைவுகூரக் கேட்பார்கள். அதற்கு அனுமதிக்க முடியாதுஎன்றார்.

இதன்போது, எழுந்த செய்தியாளர் ஒருவர்- “தியாகி திலீபன் உங்களிற்கு வேண்டுமானால் பயங்கரவாதியாக இருக்கலாம். ஆனால், எம்மை பொருத்தவரை- தமிழ் மக்களிற்கு- அவர் தியாகி. தமிழ் மக்களிற்காகவே அவர் போராடி உயிர் நீத்ததாக கருதுகிறார்கள்" - என்றார்.

இதை மொழிபெயர்பாளர் மொழிபெயர்த்துச் சொன்னபோது, "இது அவரது கருத்து" என்று கெஹலிய கூறிவிட்டு 'கப்சிப்'பாக இருந்து விட்டார்.


Previous Post Next Post