பகுதியாக முடங்குகிறது ஜெர்மனி! உணவகங்கள் பூட்டு!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஜெர்மனிய அதிபர் அஞ்சேலா மெர்கெல் தேசிய அளவில் நாடு முழுவதையும் பகுதியாக முடக்கும் (partial Covid lockdown) அறிவிப்பை விடுத்திருக்கிறார்.

இதன்படி நவம்பர் 2ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஒரு மாத காலப்பகுதிக்கு நாடெங்கும் அமுலுக்கு வரவுள்ள புதிய தடுப்பு நடவடிக்கைகளை அவர் இன்று வெளியிட்டிருக்கிறார்.

உணவகங்கள், கலாசார மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அங்கு மூடப்படுகின்றன.உணவு விநியோக சேவையை (take-away) வழங்க உணவகங்கள் அனுமதிக்கப்படும். கடைகள், பாடசாலைகள், ஆரம்ப பள்ளிகள் வழமை போன்று திறந்திருக்கும்.

ஆர்ப்பாட்டங்கள் தவிர பெரியளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள் தடைசெய்யப்படுகின்றன. பொது இடங்களில் ஒன்று கூடுவோர் எண்ணிக்கை பத்தாக வரையறுக்கப்படுகிறது. 

இக்காலப் பகுதியில் உதைபந்தாட்ட சம்பியன் போட்டிகள் உட்பட தொழில் முறையான சகல விளையாட்டு நிகழ்வுகளையும் கடுமையான சுகாதார நெறிமுறைகளுடன் மூடிய அரங்குகளுக்குள் நடத்துவது என்று நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்களது சம்மதத்துடன் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இவை தவிர்ந்த ஏனைய அமெச்சூர் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன.மிக வேகமான வைரஸ் பரவலுக்கு விளையாட்டுப் போட்டிகள் வாய்ப்பளிக்கின்றன என்பதாலேயே அவற்றைத் தடைசெய்ய அரசு தீர்மானித்துள்ளது.

கடுமையானதும் நாடு முழுமைக்கும் உரியதுமான இந்தப் புதிய கட்டுப்பாடுகளால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை ஈடுசெய்வதற்காக மேலும் 10 பில்லியன் ஈரோக்கள் ஒதுக்கப்படுவதாக மெர்கல் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

கடைசியாக வெளியாகிய சுகாதார அறிக்கைகளின்படி ஜெர்மனியில் ஒருநாள் தொற்று எண்ணிக்கை 14 ஆயிரத்து 964 என்று கணக்கிடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 85 உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. நத்தார் பண்டிகைக்கால குடும்ப ஒன்று கூடல்கள் தொற்று நிலைவரத்தை மேலும் மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Previous Post Next Post