பிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை! விசா இல்லாதவர்களுக்கும் பாதிப்பு!!


பிரான்ஸில் பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களின் சுயதொழில் என்பது கடை நடத்துவதாகும். அதிலும் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாச்சப்பல் பகுதி யாழ்ப்பாணத் தமிழர்களின் தனித்துவமான இடமாக காலூன்றி நிற்கின்றது. 

அதேநேரம் லாச்சப்பல் பகுதி மட்டுமன்றி பிரான்ஸின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களின் இருப்பு என்பது அதிகமாகவேயுள்ளதுடன், அங்கும் கடைகள் நடாத்தி தங்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றனர்.

ஆனால் தற்போது பிரான்ஸில் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றின் காரணமாக இரவு நேர ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேர வியாபாரங்கள் பாரியளவில் பாதிப்படைந்துள்ளன.

குறிப்பாக பிரான்ஸில் உள்ள பெரிய கடைகள் இரவு 10 மணியுடன் மூடப்பட, அதன் பிற்பாடு தமிழ் கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கும்.

அதனால் தமிழ் கடைகள் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருப்பதுடன், வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிகாலை ஒரு மணிவரையும் திறந்திருக்கும். இதனால் தமிழ் கடைகளில் பொருட்களின் விலைகளும் அதிகமாக இருக்கும். இருந்தும் மக்கள் தங்களின் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழ்க் கடைகளை நாடுவதுண்டு.

தற்போது ஊரடங்குச் சட்ட நடைமுறையால் தமிழ் கடைகளின் வியாபாரங்களில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அத்துடன், உணவகங்கள் நடத்துபவர்களும் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில்தான் அதிகளவான மக்கள் உணவகங்களுக்கு உணவருந்த வருவதுண்டு. அதுவும் தற்போது தடைக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் வர்த்தகளுக்கு இந்த ஊரடங்கு நடைமுறை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இது இவ்வாறிருக்க இத் தமிழ் கடைகளில் விசா இல்லாத அதிகளவான தமிழ் இளைஞர்கள் பணிபுரிகின்றனர். ஏற்கனவே அதிகளவில் வியாபாரம் இடம்பெறும் போதே சம்பளம் வழங்காத இத் தமிழ்க் கடை முதலாளிகள், தற்போது இந்த இளைஞர்களுக்கு சம்பளம் வழங்குவார்களா என்பதும் கேள்விக்குறியே?

இதனால் விசா இல்லாது, தமிழ் கடைகளில் பணிபுரியும் தமிழ் இளைஞர்களும் இவ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாய்ப்பிருக்கின்றது.

Previous Post Next Post