வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் பணியாற்றும் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசியல் தலையீடுகள் காரணமாக குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை யாழ்ப்பாணம் தலைமையகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க மறுத்த நிலையில், பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், வடமாகாண மும்மொழிக் கற்கை நிலையத்துக்கும் இணைக்கப்பட்டார்.
மும்மொழிக் கற்கை நிலைத்தில் பணியாற்றும் குடும்பப் பெண் ஒருவருக்கு அவர் அலைபேசி ஊடாக பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
அதுதொடர்பில் குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை ஏற்க யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மறுத்த நிலையில் பொலிஸ் இணையத்தளம் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டை ஆராய்ந்த பதில் பொலிஸ் மா அதிபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டை ஏற்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு பணித்தார்.
இந்த நிலையில் குடும்பப் பெண்ணின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாக்குமூலமும் பெறப்பட்டது.
அதனடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் பிரிவின் பெண் பொலிஸ் பரிசோதகரினால் சந்தேக நபருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 345ஆம் பிரிவின் கீழ் நபர் ஒருவருக்கு செயலாலோ அல்லது சொற்களாலோ பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்டு பி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ், பிணை விண்ணப்பம் செய்யது சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபரை 2 லட்சம் ரூபாய் ஆள் பிணையில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.