எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கடந்த காலங்களில் அடுத்த தீபாவளிக்குத் தீர்வு என்று தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திய அவர், இந்த வருடம் அதைவிடுத்து இந்து மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது கொரோனாத் தொற்று அதிகரிப்கைக் காரணம் காட்டி, வரும் தீபாவளியை வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள் என இந்து மக்களுக்கு அவர் அறிவுரை கூறியிருக்கின்றார்.
தீர்வுத் திட்டத்தை மறந்து விட்டாரோ தெரியவில்லை, ஆனால் தீபாவளிக் காலத்தில் திடீரெனக் கோமாவிலிருந்து விடுபட்டு, அறிக்கை ஒன்றை விட்டுப் பின்னர் அதே நிலைமைக்குத் திரும்புவது அவருக்கு இருக்கும் தீராத நோய்.
எனவே இந்து மக்கள் சமூகப் பொறுப்புடன்தான் இருக்கின்றார்கள். இந்து சமயத்தில் கூறப்பட்ட விடயங்கள்தான் தற்போது கொரோனாத் தடுப்புச் சுகாதார நடவடிக்கைகளாக உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் நாம் இவ்விடத்தில் விவாதிக்க வரவில்லை.
ஆனால் மாறாக, இந்துக்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு சம்பந்தன் ஐயாவுக்கு அருகதையில்லை என்ற விடயத்தையே நாம் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
ஏனெனில், இந்து மக்களுக்கும், இந்து ஆலயங்களுக்கும் கடந்த காலங்களில் பிற மதத்தவர்களால், மதத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள், அநியாயங்களை ஒரு தடவை கூட தட்டிக் கேட்கவும் இல்லை, அறிக்கை விடவும் இல்லை.
அதாவது, திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வீதி வளைவு உடைக்கப்பட்டபோது, முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வளாகத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் உடல் எரியூட்டப்பட்டபோது, தற்போது வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற அத்துமீறல்கள் என இந்து ஆலயங்கள் மீதான வன்முறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேநேரம், இந்து மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளும், தேவாலயங்களும் அமைக்கப்பட்டு, இந்து சமயத்தின் தொன்மை மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது. மத மாற்றங்கள் இந்துக்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் இவ்விடயங்கள் தொடர்பில் எதுவித நடவடிக்கைகளோ அன்றி அறிக்கைகளோ விடாத சம்பந்தன் ஐயாவுக்கு தீபாளியை இந்துக்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் என அறிவுரை கூறுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
எனவே வருடா வருடம் தீபாவளித் திருநாள் உங்களைக் கோமாவிலிருந்து விடுவிக்கின்றது என்பதையிட்டு தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அதேநேரம், அடுத்த வருட தீபாவளிக்கு உங்களின் அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.