எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தீவகத்தில் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 111.37 ஏக்கர் தனியார் காணிகள் அரச படைகள் வசம் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் மேலும் 30 ஏக்கருக்கு மேல் பாதுகாப்புப் படைககளின் பயன்பாட்டிற்காக சுவீகரிக்கத் திட்டங்கள் வகுக்கப்படுவதாக அறியக் கிடைத்தது. நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தனிநபர்களுக்கு சொந்தமான 10 பேருடைய 21.91 ஏக்கரும், வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 73 பேருடைய 54.59 ஏக்கர் பொலிஸ் மற்றும் கடற்படையினரின் வசம் காணப்படுகிறது.
அதேவேளை ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 6 பேருடைய 2.37 ஏக்கர் காணிகளும் காரைநகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 22 பேருடைய 32.50 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 108 பொது மக்களின் காணிகள் கடற்படை மற்றும் பொலிசாரிடம் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் குறித்த தீவகப் பகுதிகளில் தனியார் காணிகளை அரச படைகள் தமது தேவைக்காக சுவீகரித்துள்ள நிலையில் மேலும் தனியார்களுடைய வளம் கொண்ட காணிகளை பகுதி பகுதியாக அரச படைகளின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படுகிறதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
தீவகத்தில் உள்ள காஞ்ச தேவ மற்றும் வெலிசுமன கடற்படை முகாம்களின் தேவைக்காக மண்கும்பானில் 15 ஏக்கரும், புங்குடுதீவில் 14 ஏக்கர்களையும் சுவீகரிக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மண்டைதீவுப் பகுதியில் உள்ள 18 ஏக்கர் தனியார் காணிகளை நில அளவை திணைக்களம் அளவிட முயன்றபோது மக்கள் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே வளம்மிக்க தமிழர் பகுதிகளில் தொடரும் நில ஆக்கிரமிப்புக்களை தடுப்பதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஓரணியில் நின்று குரல் கொடுப்பது காலத்தின் தேவையாகும்.