எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் வரும் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் புதிய வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தை எட்டலாம் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் உணவகங்கள் பற்றிய இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.
உணவகங்களைத் திறக்கும் திகதியை அரசு பெரும்பாலும் ஈஸ்டர் காலத்தை அண்டி ஏப்ரல் 6 செவ்வாய்க்கிழமை ஆக நிர்ணயிக்க உள்ளது என்ற தகவலை "லு புவான்"( Le Point) சஞ்சிகை எலிஸே வட்டாரங்களை ஆதாரம் காட்டி வெளியிட்டுள்ளது.
பிரதமர் கடைசியாக அறிவித்த கால அட்டவணைப்படி உணவகங்களும் அருந்தகங்களும் பெப்ரவரி நடுப்பகுதி வரை திறக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் ஆரம்பித்தது முதல் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்ற நாட்டின் உணவகத் துறை ஒரு வித "செயற்கை கோமா நிலையை" அடைந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இப்படியே நிலைமை நீடித்தால் அரைவாசிக்கும் மேலான உணவகங்கள் திவால் ஆகும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதேவேளை மாற்றம் அடைந்த மூன்று வகை வைரஸ் கிருமிகள் மிக வேகமாக உலகெங்கும் பரவி கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் ஏற்பட்டதை போன்ற பெரும் முடக்க நிலைகளை பல நாடுகளிலும் உருவாகி வருகின்றன.
புதிய வைரஸ் கிருமிகள் தற்சமயம் புழக்கத்தில் உள்ள சாதாரண மாஸ்க் வகைகளால் கட்டுப்படுத்த முடியாத வேகம் கொண்டவை என்ற கவலையை சுகாதார நிபுணர்கள் வெளியிட்டு வருகின்றனர். மேம்பட்ட அடுத்த வகை மாஸ்க்குகளை அணியுமாறு ஐரோப்பிய நாடுகள் சில தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளன.
மாற்றமடைந்த வைரஸ் இனங்களில் ஒன்றான தென்னாபிரிக்க வைரஸ் தற்சமயம் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்டது என்ற எச்சரிக்கையை அந்நாட்டு அறிவியலாளர்கள் குழு ஒன்று விடுத்துள்ளது.
குமாரதாஸன், பாரிஸ்.
குமாரதாஸன், பாரிஸ்.