யாழில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொது மருத்துவ வல்லுநர் ஆர்.கஜந்தனால் கோவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்து தமக்கான கோவிட் -19 தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் தவறவிடுவோர் தடுப்பூசி ஏற்றும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 820 மருத்துவ சேவையாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அத்தியட்சகர் மருத்துவர் கமலநாதனுக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டு பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.




Previous Post Next Post