
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
15 மாவட்டங்களில் தற்சமயம் நடைமுறையில் இருக்கும் மாலை ஆறுமணி ஊரடங்கு மேலும் பத்து மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப் படுகிறது. அந்தப் புதிய மாவட்டங்களது விவரங்கள் இன்று வெளியிடப்படும்.
சினிமா, அருங்காட்சியகம் போன்ற கலாசார நிலையங்களும் விளையாட்டு மையங்களும் இம்மாத (ஜனவரி) இறுதிவரை திறக்கப்படமாட்டாது.
பனிச்சறுக்கல் (ski) விளையாட்டு மையங்களை திறப்பது குறித்து அடுத்த மாத ஆரம்பத்திலேயே தீர்மானிக்கப் படும்.
புதிய வைரஸ் தொற்றில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக பிரிட்டனுடனான எல்லைகள் தொடர்ந்தும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருக்கும்.
பிரதமர் Jean Castex இன்று மாலை செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்ட விவரங்களை அறிவித்தார்.
பாடசாலைகளை மூடுவதாயின் சுகாதார நிலைமை மேலும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று கருதுவதாகப் பிரதமர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
"நாட்டின் சுகாதார நெருக்கடி வழமை நிலைக்கு மிகத் தொலைவிலேயே இன்னமும் இருக்கிறது. ஆண்டின் இறுதியில் வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளது. ஒவ்வொரு ஏழு நிமிடத்துக்கு ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறார். இரண்டு அவசர சிகிச்சைப் படுக்கைகளில் ஒன்று என்ற வீதத்தில் வைரஸ் நோயாளிகள் நிறைந்துள்ளனர்"-என்று பிரதமர் சுகாதார நிலைவரத்தை விளக்கினார்
"தடுப்பூசி காரணமாக 2021 ஆம் ஆண்டு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. கடந்த ஜந்து நாட்களில் 45 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அப்பணி சற்று மெதுவாக தொடங்கிய போதிலும் அது இனிமேல் தீவிரப்படுத்தப்படும் "-என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் Olivier Véran நாடு முழுவதும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது பற்றி இன்றை செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தார்.