யாழில் டயலொக் நிறுவன பணியாளருக்குக் கொரோனா! மூடப்பட்டது ஸ்ரான்லி வீதிக் கிளை!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவன அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அந்த நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு கொழும்பு தனியார் வைத்தியசாலை ஊடாக பிரிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. அதன் முடிவே நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரையும் சுயதனிமைப்படுத்தும் பணிகளை மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.

சுயதனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டால் கடந்த சில தினங்களில் வாடிக்கையாளர் சேவை நிலையத்துக்குச் சென்ற பொதுமக்களும் அடையாளம் காணப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

“டயலொக் நிறுவனம் தமது பணியாளரை ஒவ்வொரு மாதமும் பரிசோதனைக்கு உள்படுத்துகின்றது. அதனை தனியார் வைத்தியசாலை ஊடாக அந்த நிறுவனம் முன்னெடுக்கிறது.

அதனடிப்படையிலேயே யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள பணியாளர்கள் அனைவரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு மாத்திரம் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரை கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றவும் நெருங்கிய தொடர்பாளர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையும் முன்னேடுக்கப்படுகிறது.

அந்த நிறுவனத்தின் ஸ்ரான்லி வீதி அலுவலகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது” என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post