இலங்கையில் நீதிக்கான குரலை பிரான்ஸ் உரக்க எழுப்ப வேண்டும்! அந்நாட்டு எம்.பி. ருவீற்றர் பதிவு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக்குமான தனது குரலை பிரான்ஸ் ஐ. நா. மனித உரிமைகள் சபையில் உரத்து எழுப்ப வேண்டும்.

இவ்வாறு பிரான்ஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செபஸ்ரியன் நடோ (Sébastien Nadot) தனது ருவீற்றர் பதிவில் கேட்டிருக்கிறார்.அதிபர் மக்ரோனின் கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்த அவர் தற்சமயம் சூழலியல் கட்சி ஒன்றில் இயங்கி வருகிறார்.

தமிழ் இளையோரால் ஆரம்பிக்கப்பட்ட #GenocideSriLanka ருவீற்றர் இடு குறிப் பிரசாரத்தில் அவர் இலங்கையின் சுதந்திர தினம் குறித்த தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

"இலங்கை அதன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் ஓர் உயர்ந்த அர்த்தம் இருக்க வேண்டும். அங்கு தமிழர்கள் அனுபவித்த துன்பங்களின் தலைவிதி அதன் சுதந்திரக் கொண்டாட்டத்தைப் பெறுமானம் இழக்கச் செய்துவிட்டது" - என்று தனது பதிவில் அவர் எழுதியிருக் கிறார்.

இலங்கைத் தமிழர் விடயத்தில் பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சரிடம் தான் எழுத்து மூலம் எழுப்பியுள்ள கேள்வி தொடர்பான நாடாளுமன்ற ஆவணம் ஒன்றையும் அவர் தனது ருவீற்றர் பதிவில் இணைத்துள்ளார்.

" இலங்கை விடயத்தில் பிரான்ஸ் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது" என்று அதில் செபஸ்ரியன் நடோ எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் சபையில் 2021-2023 காலப் பகுதிக்கான பிரான்ஸின் பிரசன்னத்தைச் சுட்டிக் காட்டியிருக்கின்ற அவர், மனித உரிமைப் பெறுமானங்களை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் பிரான்ஸ் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான செபஸ்ரியன் நடோ 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மக்ரோனின் La République En Marche கட்சியின் சார்பில் Haute-Garonne மாவட்டத்தின் பத்தாவது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராகத் தெரிவாகி இருந்தார்.

பின்னர் 2018 டிசெம்பரில் மக்ரோன் அரசின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறி Écologie Democratie Solidarité என்ற பெயரில் சூழலியல் குழு ஒன்றுடன் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கி வருகிறார்.

இலங்கையில் நீடித்த அமைதிக்கும் தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ வேண்டும் என்று கேட்டு அதிபர் எமானுவல் மக்ரோனுக்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் அண்மையில் கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post