யாழில் தீவிரமடையும் கொரோனா! வட மாகாணத்தில் 16 பேருக்குத் தொற்று!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • யாழ்ப்பாணம் - 11
  • வவுனியா - 01
  • மன்னார் - 04
வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலி்ருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 244 பேரின் மாதிரிகள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அவர்களில் மூவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள். சிறைச்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் இரண்டு சுயதனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறே பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் மூவருக்கு இன்றைய பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பியவர்கள்.

அந்த இறுதிச் சடங்கில் பங்குபற்றிய சிலருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இவர்கள் மூவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 241 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாந்தை மேற்கில் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 24 பேருக்கு தொற்று உள்ளமை கடந்த வாரம் கண்டறிப்பட்ட நிலையில் இவர்கள் நால்வரும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள பண்ணாகத்தில் ஒரே குடும்பத்தில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தில் வயோதிபப் பெண்ணுக்கும் மாணவன் ஒருவருக்கும் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது.

அச்சுவேலி வியாபாரியின் குடும்பத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் மேலும் ஒருவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post