31 தமிழர்களை நாடு கடத்தியது ஜேர்மனி! விமான நிலையத்தை முடக்கிப் போராட்டம்!! (வீடியோ)


ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் 31 பேர் கடும் எதிர்ப்புக்களையும் மீறி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 31 பேரும் இன்று புதன்கிழமை இலங்கைக்கு வந்து சேரவுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டு நாடு கடத்தும் நோக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிட கோரிக்கையாளர்கள் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், ஜேர்மனிய மனிதநேய மற்றும் அகதிகள் நலன்சார் அமைப்புக்கள், சட்டவல்லுனர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினாலும், புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையிலும் இவா்கள் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் கைது செய்யப்பட்ட 31 புகலிட கோரிக்கையாளர்கள் டுசெல்டோர்ஃப் (Düsseldorf) சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஈழத்தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் டுசெல்டோர்ஃப் விமான நிலையத்தில் நேற்று ஜேர்மனில் உள்ள தமிழர்கள், ஜோ்மனிய இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினர் இணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும், எதிர்ப்பை மீறி அகதிகள் நாடுகடத்தப்பட்டனர்.

ஜேர்மனியில் நோர்த்ரெய்ன்-வெஸ்ட்பாலன் (Nordrhein-Westfalen) மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் (Baden-Württemberg) ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற திடீர் தேடுதலின்போது 100-க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். இவா்களில் 31 பேரே முதல் கட்டமாக நாடு கடத்தப்பட்டனர்.

நோர்த்ரெய்ன்-வெஸ்ட்பாலன் மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் வீடுகளைச் சோதனையிட்ட ஜேர்மனிய அதிகாரிகள், அங்கு விசா இன்றித் தஞ்சம் கோரியிருந்தவர்களை உரிய அனுமதியைப் பெற வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பி பொலிஸார் அழைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

31 தமிழர்கள் டஸ்ஸெல்டார்பிலும், 50 பேர் பிராங்பேர்ட்டிலும், 11 பேர் ஸ்டட்கார்ட்டிலும் நாடு கடத்தப்படும் நோக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஜோ்மனிய அரசின் நாடு கடத்தல் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரென் (Büren) மற்றும் போர்ப்ஷைம் (Pforzheim) தடுப்புக்காவல் முகாம்களுக்கு முன்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

எனினும் எதிர்ப்பை மீறி தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் 31 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீா்மானத்தை முன்வைத்த முதன்மை நாடுகளில் ஒன்றாக ஜோ்மனி உள்ளது. இவ்வாறான நிலையில் தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகளை அந்நாடு திருப்பி அனுப்பியுள்ளமை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.



Previous Post Next Post