எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டின் வடக்கு கடலோர மாவட்டமான பா-து-கலே (Pas-de-Calais) பகுதிக்கு மட்டுமே வார இறுதி நாள்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு இரு தினங்கள் அமுலாக்கப் படுகின்ற பொது முடக்கத்தில் பாரிஸ் பிராந்தியம் இந்த வாரம் உள்ளடக்கப்படவில்லை.
இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. அங்கு வார இறுதி பொதுமுடக்கத்தைக் கொண்டுவருவது தொடர்பில் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசுக்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் பரிமாறப்பட்டு வருவது தெரிந்ததே.
பாரிஸ் பிராந்தியம் உட்பட தீவிர கண்காணிப்பில் உள்ள 20 மாவட்டங்களுடன் மேலும் புதிதாக மூன்று மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் Jean Castex இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார். Hautes-Alpes, Aisne, Aube ஆகிய மூன்றுமே புதிய மாவட்டங்கள் ஆகும்.
மொத்தம் 23 தீவிர தொற்று மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இந்த வார இறுதியில் தீவிரமாக முன்னெடுக்ககப்படவுள்ளன என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பாரிஸ் உட்பட இந்த மாவட்டங்களில் பத்தாயிரம் சதுர மீற்றர் (10,000 m2) பரப்பளவு கொண்ட வர்த்தக மையங் கள்(centres commerciaux non alimentaires) மூடப்படவுள்ளன என்ற புதிய கட்டுப்பாட்டையும் பிரதமர் இன்று வெளியிட்டிருக்கிறார். தற்சமயம் நாடெங்கும் 20 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட வர்த்தக மையங்கள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது..
- குமாரதாஸன், பாரிஸ்.