யாழ். வடமராட்சி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து முல்லேரியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த மயிலிட்டி நபர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை 07ஆம் விடுதியில் சிகிச்சை பெற்றவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததை அடுத்து குறித்த விடுதி தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நோயாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவர் முல்லேரியா ஐடிஎச் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறு முல்லேரியா ஐடிஎச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில், பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியில் வசித்து வரும், மயிலிட்டியைச் சேர்ந்த இராசரட்ணம் - வெற்றிக்கொடி என்ற முதியவரே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சுமார் 70 வயதுடைய இவருக்கு நீரிழிவு நோய் உள்ளிட்ட வேறு நோய்த் தாக்கங்கள் அதிகமாக இருந்த நிலையிலேயே கொரோனாத் தொற்றும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்-11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக புலோலி சுகாதார பிரிவு அதிகாரியினால் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு முதல்கட்டதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும் அவரகளது தனிமைப்படுத்தல் காலம் நாளை மறுதினம் வரை (ஏப்-13) நடைமுறையில் உள்ளதாக அப்பகுதி சுகாதார பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்தவரது உடல் உறவினர்களிடம் கையளிக்கப்படமாட்டாது என்பதால், சுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்கமைவாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் முல்லேரியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.
சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக அங்கு குடும்பத்தாரின் முன்னிலையில் உயிரிழந்தவரது சடலம் தகனம் செய்யப்பட இருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.