எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
பெண் மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதும் அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் கணவனைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், பொலிஸாருக்கு பணித்தார்.
உடுப்பிட்டியைச் சேர்ந்த சிந்துயன் ரிசிக்கா (வயது-19) என்ற பெண்ணே உயிரிழந்தார்.
திருமணமாகிய ஒருவருடம். அவர் 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணப்பெண். கடந்த 17ஆம் திகதி அவரது உடலில் மண்ணெண்ணை ஊற்றி எரியூட்டப்பட்ட எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 6 நாள்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில்நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
அவரது உடலில் தீ காயங்கள் ஏற்பட்டமையில் சந்தேகம் இருப்பதாகவும் கணவனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் பொலிஸாருக்கு பணித்தார்.