யாழ். ஆலயத் தேர்த் திருவிழாக் காணொளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு! ஆலய தலைவர், செயலாளர் கைது!!


யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் கோவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் பரவலை ஏற்படுத்த வழிசமைத்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர், செயலாளர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளைமறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது. அதனால் இருவருக்கும் இன்று இரவு பொலிஸ் பிணை வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்திர பெருந்திருவிழா இடம்பெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.

அந்தக் காணொலி காட்சி தென்னிலங்கை தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனான்டோவின் பணிப்பில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


நாட்டில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய 50 பக்தர்களுக்கு மட்டுமே ஆலயத்தில் ஒரே நேரத்தில் வழிபட அனுமதிக்கப்படும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post