யாழ்.மாநகர கடைகளை மீளத் திறப்பதற்குக் கட்டுப்பாட்டுடன் அனுமதி!


யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களில் கோவிட்-19 நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர் கள் இனங்காணப்பட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை வியாழக்கிழமை தொடக்கம் திறக்க அனுமதிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் விடுத்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 14 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

நேற்று அவசரமாக கூடிய யாழ்ப்பாணம் மாவட்ட உயர்மட்டச் செயலணியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் தவிர்ந்த ஏனையோரின் கடைகளை நாளை முதல் திறப்பதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வழமை போன்று ஒன்று கூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை ஒன்று கூடாத வண்ணம் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டதில் அபாய நிலை இன்னும் நீங்கவில்லை. எனவே தற்போதைய நிலையில் பொது மக்கள் ஒன்று கூடலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் – என்றார்.
Previous Post Next Post