யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாகத் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. அவர்கள் அனைவரும் இளவயதினர் என்பதுடன் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கேம் விளையாடத் தொலைபேசி தரவில்லை என்பதற்காகத் தற்கொலை, காதலன் உயிரிழந்த சோகம் தாங்காது தற்கொலை என நீண்டு செல்கிறது தற்கொலைக்கான காரணங்கள்.
அதிலும் ஏன் என் பிள்ளை தற்கொலை செய்து கொண்டாள் என்று அறியாது அவலப்பட்டுக் கொண்ருக்கும் எத்தனையோ பெற்றோர்களின் உள்ளக் குமுறல்கள் நெஞ்சை அடைக்கின்றது.
ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைப் பார்க்கும்போது இதயம் பதைபதைத்துப் போகிறது. தற்கொலைக்கான காரணங்களைப் பார்க்கும்போது இதற்காக இப்படிச் செய்தார்களாக என்று எண்ணத் தோன்றும்.
அந்தளவுக்கு சிறு பிரச்சினைகளைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவில் நம் இளம் சமூகம் பலவீனப்பட்டுள்ளதென்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
சிறிது காலத்துக்கு முதல் வர்த்தக முயற்சியில் நட்டப்பட்டவர்கள், மீற்றர் வட்டிக்குக் கடன் பெற்று எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்கள், எதுவும் செய்ய முடியாத நிலையில் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டனர்.
இந்த சம்பவம் கண்டு நம் மக்கள் சமூகம் குய்யோ முறையோ என்று கதறி அழுது வர்த்தக நட்டங்கள், மீற்றர் வட்டி ஆபத்துக்களை எடுத்துரைத்ததன் காரணமாக இந் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இது ஆறுதலைத் தந்திருந்தபோதிலும் இப்போது பேரிடியாக இளம் பிள்ளைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்ற சம்பவங்களை அறியும்போது இறைவா! ஏன்தான் இந்தக் கொடுமை என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு தற்கொலை மரணங்கள் பயங்கரமாக உள்ளன.
எனவே இது விடயத்தில் மக்கள் சமூகம் விழிப்படைய வேண்டும். பொது அமைப்புகள் ஆற்றுப்படுத்தும் பணியில் இறங்க வேண்டும். உளவளத்துணை யாளர்கள் ஊர் தோறும் தங்கள் பணியின் முக்கியத்துவத்தைக் கூறி இளம் சமூகத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.
இதற்குமேலாக; சாந்திகம், அகவிழி, இகை கொடுக்கும் நண்பர்கள் போன்ற அமைப்புகள் தங்கள் பணியை விரிவுபடுத்தி அதன் மூலம் தற்கொலை மரணங்களைத் தடுக்க முன்வர வேண்டும்.
இவையாவற்றுக்கும் மேலாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் விழிப்பாக இருப்பது மிகவும் அவசியமாகும். அதாவது தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானிப்பதுடன் தங்கள் பிள்ளைகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வும் ஆலோசனையும் வழங்கக்கூடிய பக்குவ நிலையை பெற்றோர்கள் கொண்டிருப்பதும் கட்டாயமானதாகும்.