பிரான்ஸ் உணவகங்களில் வெளி இருக்கைகள் திறக்கப்பட்டன! நடைபாதையில் இருந்து கோப்பி குடித்த அதிபர் மக்ரோன்!!

  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகின்ற கால அட்டவணையின் இரண்டாவது முக்கியமான தளர்வுகள் இன்று மே 19 ஆம் திகதி நடைமுறைக்கு வந்துள்ளன.

மிக நீண்ட காலம் இருண்டு கிடந்த பாரிஸ் உணவகங்கள், அருந்தகங்களின்
வெளி இருக்கைகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டன. வெளி இருக்கை வசதிகள் குறைந்த உணவகங்கள் வீதி நடைபாதை ஓரங்களிலும், வாகனம் நிறுத்தும் இடங்களிலும் தற்காலிக வெளி இருக்கைகளைத் தயார் செய்திருந்ததைக் காணமுடிகிறது.

வெளி இருக்கைகளில் பேணப்பட வேண்டிய இடைவெளி மற்றும் சுகாதாரம் பேணும் ஏற்பாடுகளைச் செய்ய முடியாத நிதி நிலைமையில் உள்ள சில உரிமையாளர்கள் தங்கள் உணவகங்களைத் திறப்பதை ஜூன் 9ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளனர். 

அன்றைய தினம் முதல் உணவகங்கள் உள் இருக்கைகளையும் திறந்து இயங்க முடியும்.

எலிஸே மாளிகை அருகே உணவகம் ஒன்றின் வெளி இருக்கையில் பிரதமர்
ஜீன் காஸ்ரோவுடன் அமர்ந்து கோப்பி அருந்தும் படங்களை நாட்டின் அதிபர்
மக்ரோன் இன்று காலை தனது ருவீற்றர் தளத்தில் வெளியிட்டார்.

"எங்கள் அனைவரினதும் கூட்டு முயற்சியால் நாம் கண்டடைந்த புதிய
சுதந்திர உணர்வின் ஒரு சிறு தருணம் இது" என்று கருத்து தெரிவித்த மக்ரோன்
ஆனாலும் "நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விழிப்புடன் கூட்டாக
வெற்றி பெறவேண்டும்" என்று அங்கு குறிப்பிட்டார். ஊடகங்கள் இத்தகவலை
வெளியிட்டுள்ளன.
 
நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வித இயல்பு நிலை திரும்பியதன் அறிகுறியாக நாட்டின் பல பகுதிகளிலும் பொது மக்கள் உணவகங்களின் வெளி இருக்கைகளை மொய்த்து பானங்களை அருந்தி மகிழும் காட்சிகளை பிராந்திய ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

இரவு ஊரடங்கு நேரமாற்றம்

இன்றைய இரண்டாம் கட்ட தளர்வுகளின் கீழ் இரவு நேர ஊரடங்கு நேரம் மாற்றப்படுகிறது. தற்சமயம் ஏழு மணிமுதல் அமுலுக்கு வருகின்ற ஊரடங்கு இன்று முதல் ஜூன் 9ஆம் திகதிவரை இரவு ஒன்பது மணியில் (21.00) இருந்து ஆரம்பிக்கும்.

திரையரங்குகள் திறப்பு

இன்றைய தளர்வுகளின் கீழ் சினிமா திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. அரங்குகளின் மொத்த ஆசனங்களதுகொள்ளளவில் 35 வீதமான பார்வை
யாளர்களுடன் திரையரங்குகள் இயங்கமுடியும். 

பார்வையாளர்கள் இடையே ஓர் ஆசனம் அல்லது ஒரு மீற்றர்இடைவெளி பேணப்படுவது கட்டாயம் ஆகும்.திரையரங்கின் உள்ளேயும் சினிமா பிரியர்கள் மாஸ்க் அணிந்தி ருக்க வேண்டும்.  சோளப் பொரி போன்ற சிற்றுண்டிகளைக் கொறிக்க முடியாது. 

புதிய தளர்வுகளை அறிவிக்கும் அரசிதழின்(Journal officiel) படி மரணச்சடங்குகளில் பங்குபற்றக் கூடியவர்களது எண்ணிக்கை இன்று தொடக்கம் 35 இல் இருந்து 50 ஆக அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறது.
Previous Post Next Post