பிரான்ஸில் கடும் கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நடாத்த அனுமதி!


  • குமாரதாஸன், பாரிஸ்.
பிரான்ஸில் நிறுத்தப்பட்ட அல்லது ஒத்திவைத்த திருமணக் கொண்டாட்டங்களை மீண்டும் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது கட்டத் தளர்வுகள் ஆரம்பமாகவுள்ள மே 19 ஆம் திகதி
தொடக்கம் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மணமகன், மணமகள் இருவரும் சில சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். வெளியிலோ அல்லது உள்ளேயோ திருமணம் நடைபெறுகின்றமண்டபத்தின் கொள்ளளவில் 35 வீத மான பங்கினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

மண்டபத்தின் உள்ளே விருந்து பரிமாற முடியாது. வெளி இருக்கைகளில் உரிய விதி முறைகளில் உணவு விருந்து வழங்கலாம். ஜூன் 9ஆம் திகதிவரை இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும். அதன் பிறகு வழமை போன்று நிகழ்வுகளை
நடத்த வாய்ப்பு ஏற்படும்.
 
நீண்ட காலமாகத் திருமணம் போன்ற கொண்டாட்ட நிகழ்வுகள் தடைப்பட்டுள்ளன. திருமணங்களை ஏற்பாடு செய்கின்ற துறைகளைச் சார்ந்தவர்கள் மிக மோசமான வருமான இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

திருமண மண்டபம், உணவு, பூச்சோடனை, ஆடை வடிவமை ப்பு, ஒலி, ஒளி ஏற்பாடுகள் என ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல துறைகளின் முடக்கம் காரணமாக இந்த ஆண்டுஒரு பில்லியன் ஈரோக்கள் வருமான இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
பிரான்ஸில் மே முதல் செப்ரெம்பர் வரையான பகுதியே திருமண கொண்டாட்டங்களுக்குரிய காலம். திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை உள்ளடக்கிய சங்கத்தினர் (services du secteur des marriages) தங்கள் தொழில் துறைகளை எப்படி, எப்போது மீள ஆரம்பிப்பது என்பது பற்றிப் பொருளாதார அமைச்சுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

l'Union des Professionnels Solidaires de l'Evénementiel (UPSE), என்றழைக்கப்படுகின்ற கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோர் சங்கம் தற்சமயம் அரசு
அதிகாரிகளுடன் இது பற்றி விவாதித்து வருகிறது.

பிரான்ஸில் ஆண்டு தோறும் 230,000 திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 40,000 திருமணங்கள் மே மாதத்தில் மட்டும் நடக்கின்றன என்று
புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
Previous Post Next Post