தற்போதைய நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் .
இது விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் கொவிட்டின் அதி தீவிர தன்மை காரணமாக 45 லட்சம் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கான தற்போதைய பொருளாதார சிக்கலான நிலைமைகளிலும் கூட தங்களுடைய சொந்த செலவுகளில் மிகுந்த அர்பணிப்புடன் ஆசிரியர்கள் நிகழ்நிலை online கற்பித்தலில் ஈடுப்படுவது தொடர்பாக நாம் புதிதாக கூற வேண்டிய தேவையில்லை.
இவ்வாறு இருக்கையில் அவர்களுக்கான எவ்வித கொடுப்பனவுகளையோ, வசதி வாய்ப்புகளையோ பெற்றுக்கொடுக்காமல் அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் அனுப்பி ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக மேற்பார்வை செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை ஆசிரிய சேவை சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, இத்தகைய பொறுப்பற்ற நவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறது.
“நிகழ்நிலை on line கற்பித்தலின் போது மாணவர்களின் பயிற்சிகளை திருத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் அதிக நேரத்தை செலவழிக்க நேரிடுவதோடு, ஆசிரியர்களுக்கு அழுத்தமாகவும் மேலதிக சுமையாகவும் அமையும்”
இந்நிலையில் சகல பாடசாலைகளும் இடையிடையே திறக்கப்பட்டாலும் ஒரு வருடத்திற்கு மேலான காலம் மூடப்பட்டிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் வரவு - செலவு திட்டத்தின் போது கல்விக்கான ஒதுக்கீடு இடம்பெற்ற போது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக செலவிடாமை கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கை ஆசிரிய சேவை சங்கமானது வீழ்ச்சியடைந்துள்ள மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தல் தொடர்பாக ஆலோசனைகளை முன்வைத்தது. ஆயினும் அவற்றை கல்வி அமைச்சானது எவ்வித கருத்திலும் கொள்ளவில்லை.
ஒரு வருடத்திற்ககு மேலாக வீழ்ச்சி கண்டுள்ள கல்வி செயற்பாடுகளை மேம்படுத்த வேண்டுமெனின் , இத் தருணத்தில் அரசாங்கமானது நிகழ்நிலை online கற்பித்தலுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதியினை ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்துவதாக சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.