தமிழக - புதுச்சேரி எல்லையில் ஒரே சாலையில் புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு பரபரப்பாகவும், தமிழகப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடியும் காணப்படும் விநோதக் காட்சி அரங்கேறி வருகிறது.
புதுச்சேரி பகுதி தமிழகத்தையொட்டி அமைந்துள்ளது. இதில் தமிழகப் பகுதிகளும், புதுச்சேரி பகுதிகளும் மாறி மாறி வரும் தன்மை உடையவை. புதுச்சேரி எல்லைப்பகுதிக்குள் தமிழக கிராமங்களும் உள்ளன.
கொரோனா பரவலையொட்டி தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் வந்துள்ளது. புதுச்சேரியில் பகல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தக் கடைவீதி புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் அமைந்துள்ளது. ஒரு பகுதியில் திருக்கனூர் பகுதியில் கடைகள் திறந்திருக்கும் பகுதி புதுச்சேரியில் வருகிறது. சாலையின் மற்றொரு பகுதி விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு பகுதியைச் சேர்ந்தது. இதனால் புதுச்சேரி பகுதியில் வாகனப் போக்குவரத்து பரபரப்பாகவும், தமிழகப் பகுதியில் கடைகள் மூடப்பட்டு வாகனங்கள் ஏதுமின்றியும் காணப்பட்டது.