யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இடம்பெற்ற திருமண நிகழ்வு வழக்கில், மணமகனை கடுமையாக எச்சரித்த மல்லாகம் நீதிமன்றம், அவருக்கு 20,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் சண்டிலிப்பாய் சுகதார வைத்திய அதிகாரி பிரிவில் பண்டத்தரிப்பு, பிரான்பற்றில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்ப்படுத்துள்ள நிலையில், குடும்பத்தினரின் பங்கேற்புடன் வீட்டில் திருமணம் நடக்க சுகாதார பிரிவினர் அனுமதித்த போதும் அதனை உதாசீனம் செய்த நிகழ்வுக்குரியவர்கள், ஊரைக்கூட்டி, மண்டபத்தில் திருமணம் நடந்தது.
இதையடுத்து சுகாதார பிரிவினர், திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 47 குடும்பங்களை தனிமைப்படுத்தி கடந்த 13ஆம் திகதி அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 13 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்த நிலையில் திருமண நிகழ்வு தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் , பயணத்தடை காலத்தில், சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மணமகனின் பெயர் குறிப்பிட்டே திருமண நிகழ்வு அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், அவர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்தார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மணமகனை கடுமையாக எச்சரித்த நீதிவான், இந்த குற்றத்திற்கு 6 மாதம் வரையான சிறைத்தண்டனை விதிக்கலாம் என குறிப்பிட்டு, 20,000 ரூபா அபராதம் விதித்தார்.
அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மணமகனின் சகோதரன் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் தொடர்பிலான தகவல்களை சுகாதார பிரிவினருக்கு வழங்குமாரும் நீதிமன்றம் உத்தரவிட்டது.