மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்ட இடத்தில் அவா்களது வளர்ப்பு நாய் தனது எஜமானர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மனதை உருக்கும் சம்பவம் இடம்பெற்றது.
மண்சரிவை அடுத்து இந்தப் பகுதிக்கு மீட்புக் குழுவினர் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த நாய் அந்தப் பகுதியில் புதையுண்டவர்களை கண்டறியும் முயற்சியில் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடித்திரிந்தது.
எனினும் அதனை அறியாத மீட்புப் பணியாளர்கள் அந்த நாயை விரட்டியடித்தனர். எனினும் நாய் மீண்டும் வந்து தனது கால்களால் சேற்றை வாரத் தொடங்கியது.
பின்னர் புரிந்துகொண்ட மீட்புக் குழுவினர் அந்த நாய் கொடுத்த துப்பைப் பயன்படுத்தி அந்த இடத்தைத் தோண்டியபோது அங்கிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
சண்டே ரைம்ஸ் ஊடகவியலாளர் பிரதீப் குமார் தர்மரத்ன இந்த நாய் தனது எஜமானர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட புகைப்படத்தை எடுத்துள்ளார்.
மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்று மண்ணில் புதையுண்டது. அங்கிருந்த தாய், தந்தை மற்றும் அவர்களின் 23 வயது மகள், 29 வயது மகன் என 4 பேர் மண்சரிவில் புதையுண்டு காணாமல்போயிருந்தனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின்போதே புதையுண்ட குடும்பத்தினரின் வளர்ப்பு நாய் கொடுத்த துப்பைப் பயன்படுத்தி 23 வயதான மகளின் சடலம் முதலில் மீட்கப்பட்டது. பின்னர், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளையடுத்து தந்தை, தாய், மகன் ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் கே.விஜேரத்ன, (வயது 57), லலிதா விஜேசிங்க (வயது 56), உமேஷா விஜேரத்ன (வயது 29) ஷனித விஜேரத்னவின் (வயது 27) ஆகிய நால்வருமே உயிரிழந்தவர்களாவர்.