மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தமைக்கு ஐஸ் போதைப்பொருளை அதிகளவில் உட்கொண்டமையே காரணம் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தாக்குதலிலேயே இளைஞர் உயிரிழந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதயபுரம் பகுதியை சேர்ந்த சந்திரன் விதுசன் (வயது-22) என்ற இளைஞரே உயிரிழந்தார்.
ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (02) குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் சில மணித்தியாலங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்தார் என்றும் பொலிஸார் கூறினர்.
இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியினால் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
அதன்போதே இளைஞன் ஐஸ் போதைப்பொருளை அதிகளவில் உட்கொண்டமையே காரணம் என்று சட்ட மருத்துவ அதிகாரியினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எங்கள் கண்முன்னாள் பொலிஸார் சகோதரனைத் தாக்கினார்கள் என்று உயிரிழந்தவரின் சகோதரி, இறப்பு விசாரணையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எனினும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் பொலிஸார் தாக்குதல் நடத்தியமையினால் இளைஞர் உயிரிழந்தமை தொடர்பில் எந்தக் காரணமும் தெரிவிக்கப்பட்டவில்லை என்பதால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.