14 வயதில் அகதியாக வந்த சிறுவன் பிரான்ஸுக்குப் பதக்கம் வென்றான்!


  • குமாரதாஸன், பாரிஸ்.
ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் தனது முதல் பதக்கத்தை வென்றிருக்கிறது. இன்று நடைபெற்ற 60 கிலோவுக்கு குறைந்த பிரிவு ஜூடோ போட்டியில் பிரான்ஸின் வீரர் லூகா மெக்ஹாய்ட்ஸே(Luka Mkheidze) வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

தன்னோடு மோதிய தென் கொரியா வீரரைத் தோற்கடித்து மூன்றாவது இடத்தை வென்றுள்ளார்.
 
"இந்த வெற்றியை மிக மிக மகிழ்வுடன் உணர்கிறேன். ஒலிம்பிக்கில் பங்குபற்றி ஒரு பதக்கத்தை எடுத்துவரவேண்டும் என்று சிறுபராயத்தில் கனவு கண்டேன். இன்று மூன்றாவது இடத்தை வென்றேன் என்பதை இன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.

வீரர் லூகாவின் வாழ்வுக்குப் பின்னால் பெரிய சோதனை இருக்கிறது. வெளிநாட்டினர் பலரைப் போலவே லூகாவும் தனது சிறு வயதில் ஓர் அகதியாகக் குடும்பத்துடன் பிரான்ஸுக்கு வந்தவர்.

ஜோர்ஜியா(Georgia) நாட்டில் 1996 இல் பிறந்த லூகா சிறுவனாக இருந்தபோதே ஜூடோ விளையாட்டில் அந்த நாட்டின் குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர்.

உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பம், வறுமை காரணமாக 2009 ஆம் ஆண்டு லூகா தனது தாயாருடன் அங்கிருந்து வெளி யேறி பெலாரஸ் நாடு ஊடாகப் போலந்தில் தஞ்சமடைய நேரிட்டது.

அங்கு அகதி முகாம் ஒன்றில் தங்கி வாழ்ந்த லூகா குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்தனர். அதனால் அங்கிருந்து பயண முகவர்களின் உதவியுடன் சட்டவிரோதமாகப் பிரான் ஸுக்குத் தப்பி வந்தனர்.

போலந்தில் தங்கியிருந்த போதும் பின்னர் பாரிஸின் புறநகரான Villeneuve- Saint-Georges பகுதியில் வசித்த சமயத்திலும் தொடர்ந்து ஜூடோக் கலையை விடாது பயின்று வந்த லூகா, பின்னர் அகதிகள் வரவேற்பு நிலையம் ஒன்றின் பராமரிப்பில் பிரான்ஸின் லூ ஹாவ் (Le Havre) நகருக்கு இடம்மாற நேர்ந்தது.

அது அவரது வாழ்வில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அங்கு அச்சமயம் மேயராக விளங்கிய முன்னாள் பிரதமர் எத்துவா பிலிப்பின் (Edouard Philippe) உதவியால் 2015 இல் லூகா பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார். 

மேயர் பிலிப்பின் சந்திப்பால் கிடைத்த அந்த உத்வேகத் துடன் விளையாட்டுக் கலையை விடாமல் தொடர்ந்து வந்த லூகா இன்று தனது புகலிட தேசத்துக்கு ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்று வழங்கியுள்ளார்.

நேற்று ஆரம்பமாகிய ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா
வென்றது. இலகு துப்பாக்கி சுடும் போட்டியில் சீன வீராங்கனை யாங் கியான் (Yang Qian) முதல் தங்கத்தை வென்று அந்தப் பெருமையைத் தனதாக்கினார்.
Previous Post Next Post